Jan 2, 2025 - 12:40 PM -
0
இந்திய கிரிக்கெட் அணியின் தொடர் தோல்விகளால் விமர்சனத்துக்கு ஆளாகி உள்ள அணி தலைவர் ரோகித் சர்மா சிட்னி டெஸ்ட் போட்டியோடு ஓய்வை அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய அணியையும், வீரர்களின் ஓய்வு தொடர்பான சர்ச்சைகளையும் பிரிக்கவே முடியாது. அதிலும் ஒவ்வொரு முறையும் இந்திய அணி ஆட்டம் காணும் போதும், மூத்த வீரர்களின் ஆட்டம் தான் விவாதத்துக்கு உள்ளாகும். அதுபோன்று பேசுபொருளாகி இருக்கிறார்கள் அணி தலைவர் ரோகித்தும், கோலியும். பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ரோகித் மற்றும் விராட் கோலியின் ஆட்டம், அவர்களின் ஓய்வு தொடர்பான பேச்சுகளை அதிகரித்துள்ளது. குறிப்பாக அணி தலைவராகவும் தொடக்க வீரராகவும் ரோகித்தின் செயல்பாடுகளால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
2024 - 25 சீசனில் ரோகித் தலைமையிலான இந்திய அணி 5 டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது. இதற்கு முன்பு 1999 - 2000 சீசனில் சச்சின் தலைமையில் தான் இந்த நிலையில் இந்திய டெஸ்ட் அணி இருந்தது. 2024 ஆம் ஆண்டு ரோகித் 26 இன்னிங்ஸ்களில் விளையாடிய நிலையில் அவரது சராசரி 24.7 ஆக உள்ளது. கடைசி 11 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் ஒரு டக் அவுட் உட்பட 7 முறை ஒற்றை இலக்க எண்களில் ரோகித் விக்கெட்டை இழந்தார்.
விராட் கோலி 19 இன்னிங்ஸ்களில் விளையாடிய நிலையில் அவரது சராசரி வெறும் 24.52 ஆக உள்ளது. 10 போட்டிகளில் விளையாடிய அவர் வெறும் 417 ஓட்டங்களை மட்டுமே எடுத்தார். இந்திய அணி தோல்வியை சந்தித்த கடைசி 5 டெஸ்ட் போட்டிகளில் ரோகித்தின் சராசரி 15 ஆகவும் கோலியின் சராசரி 11 ஆகவும் உள்ளது.
இக்கட்டான சூழ்நிலையில் கூட ரோகித் சர்மாவால் அணிக்கு உதவ முடியாத நிலையில், தொடக்க ஆட்டக்காரராக தொடர்ந்து விளையாட சுப்மன் கில்லை அணியில் சேர்க்காததாலும் ரோகித் மீது ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். தொடர் தோல்விகளுக்கு பிறகும், தொடக்க துடுப்பாட்ட வீராக தான் இருப்பேன் என ரோகித் ஆடம்பிடிப்பதால், முன்னாள் வீரர்கள் பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர்.
மற்றொருபுறம் கோலியோ கடந்த 9 இன்னிங்ஸ்சிலும் ஒரே மாதிரியாகவே தனது விக்கெட்டை இழந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். ஸ்லிப்பில் ஃபீல்டர் இருப்பது தெரிந்தும் அங்கேயே மீண்டும் மீண்டும் கேட்ச் கொடுக்கிறாரே என ஒவ்வொரு முறையும் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். அடிச்சா இறை விழனும் என கெத்தாக இருந்த கோலி, தற்போது எதிரணியினர் நினைக்கும் போது அவரது விக்கெட்டை எடுத்து விடலாம் என்ற நிலைக்கு சென்றுவிட்டார்.
கொரோனாவிற்கு பிறகு கோலியின் ஆட்டம் பெரிதாக எந்த ஏற்றத்தையும் காணவில்லை. ஆனால் ஸ்டீவ் ஸ்மித் போல கோலியும் நிச்சயம் 'இருங்க பாய்' என மீண்டும் ஃபார்முக்கு வருவார் என ரசிகர்கள் நம்புகின்றனர். ஆனால், ரோகித்தின் நிலை அப்படி இல்லை. ரோகித் இல்லையென்றால் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி விளையாட கில் தயாராக இருக்கிறார். அணி தலைவர் பொறுப்பு பும்ராவுக்கு கொடுக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பு இந்திய அணிக்கு இருக்கும். தொடர் தோல்விகள், மோசமான ஃபார்ம் என விமர்சனங்களை சந்தித்து வரும் ரோகித் சர்மா சிட்னி போட்டியுடன் ஓய்வை அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
எனவே அந்த போட்டியில் கேப்டனாக இந்திய அணியை வெற்றி பெற செய்து, அந்த மகிழ்ச்சியோடு ரோகித் விடைபெறுவாரா? அல்லது தோல்வி முகத்தோடு ஓய்வு பெறுவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.