வடக்கு
கையெழுத்து போராட்டம் மேற்கொள்ள பொலிஸார் தடை

Jan 3, 2025 - 11:21 AM -

0

கையெழுத்து போராட்டம் மேற்கொள்ள பொலிஸார் தடை

நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிளிநொச்சி நகரில் பொதுச் சந்தைக்கு அருகில் கையெழுத்து போராட்டம் ஒன்று இன்று (02) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி நகரில் பொதுச் சந்தைக்கு அருகில் குறித்த கையெழுத்துப் போராட்டம்  மேற்கொள்ள தயாரான போது அங்குவந்த கிளிநொச்சி பொலிஸார் அனுமதி பெற்று குறித்த கையெழுத்து போராட்டத்தை மேற்கொள்ளுமாறு தெரிவித்து போராட்டத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

 

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளையும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட பின்னர் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்ட பின்பும் மீண்டும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளையும்  புதிய அரசாங்கம் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி குறித்த  கையெழுத்துப் போராட்டம் தொடர்ச்சியாக வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் இடம்பெற்று இன்று கிளிநொச்சியில் இடம்பெற்று வருகின்றது.

 

இந்நிலையில் கிளிநொச்சியில் மட்டும் இவ்வாறு பொலிஸார் இடையூறுகளை ஏற்படுத்தி தடுத்து நிறுத்தியமைக்கு ஏற்ப்பாட்டாளர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

 

நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி சேகரிக்கப்படும் குறித்த கையெழுத்துக்கள் அடங்கிய மகஜர் ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05