Jan 3, 2025 - 01:50 PM -
0
இரும்புச் சங்கிலியில் கைவிலங்குகள் பொருத்தப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்துவது தொடர்பில் கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன சிறைச்சாலை அதிகாரிகளை நேற்று (2) கடுமையாக எச்சரித்துள்ளார்.
'கைதிகளும் மனிதர்களே' என்ற வாசகத்தை நினைவு கூர்ந்த நீதவான், அவர்களை மிருகமாக நடத்தக் கூடாது என்றார்.
நீதிமன்ற விடுமுறை காலம் என்பதால், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றின் 9 நீதிமன்ற அறைகளில் உள்ள அனைத்து வழக்குகளும் மேலதிக நீதவான் பசன் அமரசேன தலைமையில் இலக்கம் 3 நீதிமன்றுக்கு நேற்று (02) அழைக்கப்பட்டது.
குறித்த வழக்குகளில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுமார் 40 சந்தேக நபர்களை சிறைச்சாலை அதிகாரிகள் இரும்புச் சங்கிலியிலாலான கைவிலங்குகளுடன் நீதிமன்ற மண்டபத்திற்கு அழைத்து வந்தனர்.
நீதிமன்ற இலக்கம் 3 இன் சிறைச்சாலையில் 20க்கும் மேற்பட்ட சந்தேக நபர்களை தடுத்து வைக்க முடியாத காரணத்தினால், சிறைச்சாலை அதிகாரிகள் சந்தேக நபர்களின் கைகளில் கைவிலங்குகளை அணிவித்து சுமார் 40 சந்தேக நபர்களை திறந்த நீதிமன்றத்திலேயே தடுத்து வைத்துள்ளனர்.
அதனை அவதானித்த கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன சிறைச்சாலை அதிகாரிகளை கடுமையாக எச்சரித்திருந்ததோடு 'கைதிகளும் மனிதர்களே' என்ற வாசகங்களை நினைவு கூர்ந்திருந்தார்.
கைதிகளை மிருகங்களைப் போன்று நடத்தக்கூடாது என மேலதிக நீதவான் பசன் அமரசேன வலியுறுத்தியுள்ளார்.
கைவிலங்கிடப்பட்ட கைதிகளை திறந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதில் சிறைச்சாலை அதிகாரிகளின் நடைமுறையில் உள்ள பாரிய குறைபாடுகளை சுட்டிக்காட்டிய மேலதிக நீதவான், கைதிகளை மனிதர்களைப் போன்று நடத்த வேண்டும் என்றார்.
எனவே, இனிவரும் காலங்களில் எந்தவொரு சந்தேகநபரையும் கைவிலங்குடன் தனது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், சந்தேக நபர்களை உரிய நடைமுறைகளுக்கு அமைய நீதிமன்ற அறையில் தடுத்து வைக்குமாறு மேலதிக நீதவான் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கைவிலங்கிடப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்ற அறையில் வைத்திருந்ததற்காக சிறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரியதோடு, சந்தேகநபர்கள் அனைவரின் கைவிலங்குகளும் அகற்றப்பட்டதாக எமது நீதிமன்ற செய்தியாளர் குறிப்பிட்டார்.