வடக்கு
இலங்கைக்கு அனுப்ப கோரி மனு கையளிப்பு!

Jan 7, 2025 - 10:56 AM -

0

இலங்கைக்கு அனுப்ப கோரி மனு கையளிப்பு!

இலங்கையில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து கடல் வழியாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்த 13 குடும்பங்களைச் சேர்ந்த இலங்கை அகதிகளை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என இலங்கை அகதிகள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கையளித்துள்ளனர்.

 

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை தமிழர்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இலங்கையிலிருந்து படகு வழியாக சட்ட விரோதமான முறையில் தனுஷ்கோடியில் தஞ்சம் அடைய தொடங்கினர்.

 

இது வரை 309 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடியில் கடல் வழியாக அகதிகளாக தஞ்சமடைந்து மண்டபம் ஈழத்தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

இதில் பொருளாதார நெருக்கடி காரணமாக தஞ்சமடைந்த இலங்கை தமிழர்களை அகதிகளாக இந்திய அரசு இதுவரை பதிவு செய்யாத காரணத்தினால் இவர்களுக்கு இந்திய அரசால் வழங்கப்படும் எந்த விதமான நிவாரணம் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

 

இந்த நிலையில் வருவாய் இன்றி தவித்த இலங்கை தமிழர்கள் ஐந்து  குடும்பத்தினர் மீண்டும் சட்டவிரோதமாக கடல் வழியாக அண்மையில் இலங்கைக்கு திரும்பிச் சென்றுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

 

மேலும் அகதிகளாக பதிவு செய்யாமல் உள்ள இலங்கை தமிழர்கள் 13 குடும்பத்தினரை படகு மூலம் அல்லது விமானம் மூலம் மீண்டும்  இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்குமாறு இன்று (06) மாவட்ட ஆட்சியரை சந்தித்து பாதிக்கப்பட்ட இலங்கை அகதிகள் மனு கையளித்துள்ளனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05