Jan 8, 2025 - 02:27 PM -
0
காலிஸ்தான் பிரச்னையில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கொண்டிருந்த நிலையில், தனது பதவியை விலகுவதாக அறிவித்திருக்கிறார். இதனையடுத்து கனடாவின் புதிய பிரதமராக தமிழரான அனிதா ஆனந்த் வெற்றிப்பெற வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கனடாவுக்கும் இந்தியாவுக்கும் நல்ல நட்பு இருந்து வந்தது. ஆனால், ஜஸ்டின் ட்ரூடோ எப்போது காலிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை எடுக்க தொடங்கினாரோ அப்போதிலிருந்து இரு நாடுகளுக்கு இடையில் மோதல்கள் தொடர்ந்து வருகின்றன. இப்படி இருக்கையில்தான் சொந்த கட்சியினரின் எதிர்ப்பு காரணமாக ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவித்திருக்கிறார்.
ட்ரூடோ நேற்று (07) கட்சி தலைமை மற்றும் பிரதமர் பதவியில் இருந்து விலகி உள்ளார். இதனையடுத்து இந்த ஆண்டு மார்ச் 24 திகதி வரை கனடா பாராளுமன்ற அவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதற்குள் கட்சி, புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும்பட்சத்தில் அவரே உடனடியாக பிரதமராக மாறுவார்.
ஆனால் ஒருவேளை மார்ச் 24 ஆம் திகதி புதிய அரசு மீது எதிர்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து அது வெற்றி பெறும் பட்சத்தில், மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட ட்ரூடோவே அடுத்த பாராளுமன்ற தேர்தல் வரையிலும் பிரதமராக தொடரும் வாய்ப்பு உள்ளது.
அனிதா ஆனந்த் கனடா லிபரல் கட்சியின் மூத்த உறுப்பினர். மட்டுமல்லாது கடந்த 2019 முதல் எம்பியாக இருந்து வருகிறார். தற்போது உள்நாட்டு வர்த்தகத்துறை மற்றும் போக்குவரத்துறையின் அமைச்சராக இருந்து வருகிறார். இதற்கு முன்னர் பாதுகாப்பு, பொதுசேவைகள் துறைகளின் அமைச்சராகவும், கருவூல வாரியத்தின் தலைவர் உள்ளிட்ட முக்கிய அரசு பொறுப்புகளையும் வகித்து வந்திருக்கிறார். இவர் பொது சேவைகள் துறை அமைச்சராக இருந்தபோதுதான் COVID-19 தொற்று பாதிப்பு கனடாவில் தீவிரம் எடுத்தது.
இதனை தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய விரைவான சிகிச்சை அளிக்கவும் தேவையான ஆக்ஸிஜன், பிபிஇ கிட், தடுப்பூசி விநியோகம் ஆகியவை தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்திருந்தார். இவரது நடவடிக்கைகள் அந்த நேரத்தில் பெரிய அளவில் பாராட்டை பெற்றிருந்தன.
எனவே இந்த மக்கள் செல்வாக்கு இவரை பிரதமராக தேர்ந்தெடுக்க உதவும் என்று தெரிவிக்கப்படுகிறது.