Jan 8, 2025 - 05:01 PM -
0
உள்நாட்டுத் கைத்தொழில்களுக்குத் தேவையான மூலப்பொருட்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்குத் தேவையான சேவைகள் என்பவற்றை செயற்திறனுடன் வழங்குவதை உறுதி செய்வதற்காக ஒற்றைச் சாளர வசதிகளை வழங்குவதன் முக்கியத்துவத்தை அரசாங்கம் அடையாளங் கண்டுள்ளது.
இது தொடர்பான முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்கான கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களத்தினால் ஜனவரி 01 ஆம் திகதி முதல் தேவையான சேவைகளை ஒன்லைன் ஊடாக வழங்க ஆரம்பித்துள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதியமைச்சர் ஹர்ஷன சூர்யப்பெரும, வர்த்தக சம்மேளன பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.
ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு தேவையான சேவைகள் ஏற்கனவே இலங்கை தர நிர்ணய நிறுவனத்தினால் இணையத்தளத்தின் ஊடாக வழங்கப்பட்டு வருவதாகவும் இதன் போது அறிவிக்கப்பட்டது.
வேறு பல நிறுவனங்கள் பல்வேறு மட்டங்களில் முன்னேற்றமுள்ள சேவைகளுக்கான ஒன்லைன் வசதிகளை வழங்க ஆரம்பித்துள்ளன. தற்போது ஒற்றைச் சாளர திட்டத்துடன் தொடர்புடைய ஐந்து வர்த்தக சபைகளான, இலங்கை வர்த்தக சம்மேளனம், தேசிய வர்த்தக சபை, தேசிய ஏற்றுமதிச் சபை, வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் மற்றும் சர்வதேச வர்த்தக சம்மேளனம் என்பன மேற்படி வசதிகள் தொடர்பில் பாராட்டுத் தெரிவித்துள்ளன.
தெரிவு செய்யப்பட்ட ஒருசில அரசு நிறுவனங்கள் டிஜிட்டல் முறைமைகள் மூலம் ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு தங்கள் சேவைகளை வழங்கத் தொடங்கியுள்ளன. அவர்களுக்கு குறித்த நிலையங்களுக்குச் செல்லாமலேயே தமது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான வாய்ப்பை வழங்குவது இதன் நோக்கமாகும்.
இணையவழி முறையின் ஊடாக தமது சேவைகளை முன்னெடுப்பது தொடர்பாக குறித்த நிறுவனங்கள் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து பிரதியமைச்சரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டோரும் ஆராய்ந்தனர்.
தேசிய ஒற்றைச் சாளர முறைமை முழுமையாகச் செயற்படும் வரையில் முன்னுரிமையளித்து நடைமுறைப்படுத்தும் விடயங்கள் தொடர்பாக இந்த வர்த்தக சபைகள் தங்கள் கருத்துக்களையும் அவதானிப்புகளையும் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
2017 ஆம் ஆண்டு முதல் இன்று வரை பெறப்பட்ட முன்னேற்றம் மிகவும் குறைவாகவே காணப்படுவதாக கூட்டத்தில் கலந்துகொண்டோரினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன் விளைவாக, ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களின் தேவைகளை எளிதாக்குவதற்கு முன்னுரிமை அளிப்பது முக்கியமானதாகும்.
2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்ததிலிருந்து நிதியமைச்சின் கீழ் திட்ட அமுலாக்கப் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதோடு, ஆலோசனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டது.
உற்பத்திப் பொருளாதாரத்திற்கு வசதி அளித்தல் மற்றும் ஏற்றுமதி செயல்பாடுகளை உயர் மட்டத்திற்கு முன்னேற்றுவது மாத்திரமன்றி உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் தொடர்பில் கருத்தில் கொண்டு இறக்குமதி நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்தும் ஆற்றலை உறுதிப்படுத்தும் நோக்குடன் குறித்த தரப்பினர் இதன் எதிர்கால செயற்பாடுகளுடன் தொடர்ந்து இணைந்திருக்குமாறு ஜந்து வர்த்தக சபைகளுக்கும் பிரதி அமைச்சர் அழைப்பு விடுத்தார்.