Jan 8, 2025 - 06:11 PM -
0
இலங்கையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள திட்டங்களை மீள ஆரம்பிக்க அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் இசோமாடா அகியோ (ISOMATA Akio) தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவை அண்மையில் பாராளுமன்றத்தில் சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்துடன், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிய முனையத்தின் நிர்மாணப் பணிகளும் துரிதப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ஜப்பானிய தூதுவர் தெரிவித்துள்ளார்.
ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவை நினைவுகூர்ந்த ஜப்பானிய தூதுவர், அந்த உறவுகளை தொடர்ந்தும் பலப்படுத்தி இலங்கையின் அபிவிருத்திக்கு தேவையான ஆதரவை வழங்குவதாக தெரிவித்தார்.
மேலும் இந்த சந்திப்பில் சபாநாயகர் மற்றும் அரசாங்கத்திற்கு ஜப்பானிய தூதுவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இங்கு உரையாற்றிய சபாநாயகர், ஜப்பான் அரசாங்கம் இலங்கை மக்களுக்கு வழங்கிய திட்டங்களை நினைவு கூர்ந்ததோடு ஜப்பானுக்கு தனது நன்றியையும் தெரிவித்தார்.
இருநாட்டு நாடாளுமன்றங்களுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இலங்கை - ஜப்பான் பாராளுமன்ற நட்புறவுச் சங்கம் பத்தாவது நாடாளுமன்றத்தில் மீண்டும் ஸ்தாபிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.
இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் தற்போதுள்ள உறவுகள் தொடர்ந்தும் வலுவடையும் என எதிர்பார்ப்பதாகவும், அதற்கு ஜப்பானின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த கூட்டத்தில் ஊழலை ஒழிக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள், தேசிய நல்லிணக்கம் போன்றவை குறித்தும் மதிப்பீடு செய்யப்பட்டது.