Jan 10, 2025 - 04:44 AM -
0
நாட்டின் கலைப் பெறுமதிகளையும் கலைஞர்களையும் கொண்டாடும் வகையில், George Keyt மையத்துடன் இணைந்து, இலங்கையில் Sotheby’s முன்னெடுத்திருந்த முதலாவது கொடை ஏலம் வெற்றிகரமாக அண்மையில் நிறைவு பெற்றது. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு, இலங்கையின் கலையை சர்வதேசமட்டத்தில் கொண்டு செல்வதற்கு உறுதியான அடித்தளத்தை ஏற்படுத்தியிருந்தது.
மூன்று நாள் நிகழ்வு டிசம்பர் 7 முதல் 9 வரை சினமன் லைஃப் ஹோட்டலில் நடைபெற்றதுடன், இதில் கலை அம்சங்களை பார்வையிடல், பிராந்தியத்தில் இலங்கையின் கலை கொண்டுள்ள செல்வாக்கு தொடர்பில் நிபுணர் குழு கலந்துரையாடல் போன்றன அடங்கியிருந்தன. இதனை Sotheby’s இன் பணிப்பாளர், விசேட நிபுணர் மற்றும் தெற்காசிய கலையின் நவீன மற்றும் இணை உலகளாவிய பரப்புகை தலைமை செயற்பாட்டாளரான இஷ்ரத் கன்கா அவர்கள் வழிநடத்தியிருந்தார். இலங்கையின் சிறந்த 35 கலைஞர்களின் 46 ஆக்கங்களை உள்ளடக்கி கொடை ஏலமும் முன்னெடுக்கப்பட்டது.
Sotheby’s முன்னெடுத்திருந்த கொடை ஏலத்தினூடாக இலங்கையின் கலைஞர்களுக்கு ஒப்பற்ற களக்கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்ததுடன், இலங்கையின் கலைஞர்களுக்கு சர்வதேச அங்கிகாரத்தை பெறவும், சர்வதேச கலைச் சந்தைகளை அணுக உள்நாட்டு கலைஞர்களுக்கு புதிய வாய்ப்பையும் ஏற்படுத்தியிருந்தது.
மேலும், Sotheby's தெற்காசிய கலை நிபுணரின் பங்கேற்பானது, உள்நாட்டு நிகழ்வை, சர்வதேச ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றியமைத்திருந்ததுடன், இலங்கையின் கலைத் திறனில் அதிகரித்துச் செல்லும் ஈடுபாட்டை வெளிப்படுத்தியிருந்தது.
உள்நாட்டு மற்றும் சர்வதேச கலை ஆர்வலர்கள் மற்றும் சேகரிப்பாளர்கள் மத்தியில் இந்த பெருமைக்குரிய ஏலம் அதிக கவனத்தை ஈர்த்திருந்தது. அவர்களின் பிரசன்னம் வளர்ந்து வரும் சேகரிப்பாளர் மற்றும் இளம் கலை ஆர்வலர்களின் பங்கேற்புடன் மேலும் வலுப்படுத்தப்பட்டிருந்தது.
வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட ஏலத்தினூடாக, முக்கியமான கலாசார பேணல் திட்டங்களுக்கு நிதியளிப்பதுடன், இதில் George Keyt அவர்கள் பணியாற்றியிருந்த கோதமி விகாரை சுவடுகளுக்கு வர்ணம் தீட்டல் மற்றும் விருத்தி செய்தல் பணிகளின் தொடர்ச்சிக்கும் பங்களிப்பு வழங்கப்படும். மேலும், கிடைக்கப்பட்ட வருமதிகளினூடாக, Keyt இன் பணிகளுக்கு வலுச்சேர்க்கவும், கலைஞரின் வாழ்க்கையை சித்தரிக்கும் ஆவணத்திரைப்படம் ஒன்றை தயாரிக்கவும் பயன்படுத்தப்படும். கலா பொல மற்றும் ஆண்டின் சிறந்த கலைஞர் திட்டங்களை முன்னெடுக்க இந்த ஏலத்தினூடாக கிடைத்த வருமதிகள் பயன்படுத்தப்படும்.
நிகழ்வின் முன்னேற்றத்தை கட்டியெழுப்ப மையம் தொடர்ந்தும் எதிர்பார்ப்பதுடன், இலங்கையின் கலை பாரம்பரியத்தை பேணுதல் மற்றும் புதிய தலைமுறை கலைஞர்களை உருவாக்குதல் போன்றவற்றுக்கு பங்களிப்புச் செய்யவும் எதிர்பார்க்கின்றது.