Jan 17, 2025 - 05:39 PM -
0
எங்கள் பண்பாடுகளும், பழக்கவழக்கங்களும் மாறிக்கொண்டும் மருவிக்கொண்டும் செல்லும் இந்தக் காலத்தில் இவ்வாறான பாரம்பரிய பொங்கல் நிகழ்வுகள் தேவையானதே. இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண பொங்கல் விழா மாதகல் நுணசை முருகமூர்த்தி கோவிலில் இன்று (17) இடம்பெற்றது.
விருந்தினர்கள் ஆலய வழிபாட்டில் கலந்துகொண்ட பின்னர் பாரம்பரிய முறைப்படி அழைத்துச் செல்லப்பட்டு சடங்காசார முறைப்படி புதிதெடுத்தல் நிகழ்வு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து அதை ஆலயத்துக்கு எடுத்து வந்து, நெல்லை உரலிலிட்டு அதனை அரிசியாக்கி பொங்கல் பொங்கும் நிகழ்வு நடைபெற்றது. சிறப்பாக 51 பானைகளில் பொங்கல்கள் பொங்கப்பட்டன.
இதன் பின்னர் மேடை நிகழ்வுகள் நடைபெற்றன. மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட இசைக் கருவிகள் கலைமன்றங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன.
வடக்கு மாகாண ஆளுநர் தனது பிரதமர் விருந்தினர் உரையில்,
1996 ஆம் ஆண்டு சண்டிலிப்பாய் பிரதேச செயலராகப் பணியாற்றியமையும் அதன்போது இந்தப் பகுதிகளுக்கு வரமுடியாத நிலைமை இருந்தமையையும் சுட்டிக்காட்டினார். 28 ஆண்டுகளின் பின்னர் இங்கு வந்து பாரம்பரிய முறையில் இடம்பெறும் பொங்கல் நிகழ்வில் பங்கேற்பது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருவதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.
அதேவேளை பொங்கல் நிகழ்வுக்காக வயலும், கோயிலும் சூழ்ந்த அமைதியான இடத்தை தெரிவு செய்து நிகழ்வை ஒழுங்கமைத்த அனைவரையும் ஆளுநர் பாராட்டினார்.
விவசாயிகளுக்கு இன்று காலநிலை மாற்றம் சவாலாகி வருவதாகக் குறிப்பிட்ட ஆளுநர்,
விவசாயிகளின் முயற்சி ஒருபோதும் வீணாகாது என்றும் அவர்களுக்கு அதற்குரிய பலன் நிச்சயம் கிடைத்தேதீரும் எனவும் தெரிவித்தார்.
வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பிரதம விருந்தினராகவும், சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவனும், கௌரவ விருந்தினராக சண்டிலிப்பாய் பிரதேச செயலர் திருமதி சுபாஜினி மதியழகனும் கலந்து கொண்டனர்.
--