Jan 18, 2025 - 11:08 AM -
0
தமிழ் சினிமாவின் பன்முகத் திறமைசாலிகளில் ஒருவரான டி.எம்.ஜெயமுருகன், நேற்று (17) தமிழகம் - திருப்பூரில் மாரடைப்பால் காலமானார்.
முன்னதாக, ஜனவரி 17-ம் திகதி ஜெயமுருகனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக திருப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, இன்று மாலை இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது.
மன்சூர் அலிகானை ஹீரோவாக வைத்து சிந்துபாத் படத்தை தயாரித்தவர் தான் டி.எம்.ஜெயமுருகன். இந்த படம் தோல்வியை தழுவிய நிலையில், இயக்குனராக களமிறங்கினார்.
அப்படி இவர் இயக்கிய முதல் படம் தான் ரோஜா மலரே. முரளி நடிப்பில் 1997-ஆம் ஆண்டு இந்த படம் வெளியாகி வெற்றிபெற்றது.
தயாரிப்பாளராக தோற்றாலும், இயக்குனராக முதல் படத்திலேயே வெற்றியை ருசித்த டி.எம்.ஜெயமுருகன், இதை தொடர்ந்து, புருஷன் எனக்கு அரசன், தீ இவன், அடடா என்ன அழகு போன்ற படங்களை இயக்கினார்.
இதில் நடிகர் கார்த்திக் ஹீரோவாக நடித்த தீ இவன் திரைப்படம் மட்டுமே ஓரளவு பேசப்பட்டது. மேலும் அடடா என்ன அழகு மற்றும் தீ இவன் படங்களுக்கு டி.எம்.ஜெயமுருகனே இசையமைத்திருந்தார்.
தமிழ் சினிமாவில் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்கிய அவரின் இழப்பிற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.