வடக்கு
நகைக் கடையில் நூதனமான முறையில் பணம் அபகரிப்பு - இருவர் கைது

Jan 19, 2025 - 12:28 PM -

0

நகைக் கடையில் நூதனமான முறையில் பணம் அபகரிப்பு - இருவர் கைது

யாழில் உள்ள நகைக் கடைக்குச் சென்று நூதனமான முறையில் பணத்தை அபகரித்த சம்பவத்தில் இராணுவ புலனாய்வு பிரிவைச் சேர்ந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

குறித்த விடயம் தொடர்பில் இதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

 

யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்கவின் வழிகாட்டலுக்கமைய யாழ்ப்பாண குற்றவிசாரணை பொலிஸ் பொறுப்பதிகாரி கலும் பண்டாரா தலைமையிலான குழுவினர் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

 

பிரதான சூத்திரதாரி சுன்னாகம் பகுதியில் 17 ஆம் திகதி ஜந்து இலட்சம் ரூபாய் பணத்துடன் கைதுசெய்யப்பட்டார்.

 

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து குறித்த செயலுக்கு உடந்தையாக இருந்த வான் சாரதி உள்ளிட்ட மூவர் கண்டியில் கைது செய்யப்பட்டனர்.

 

அதனை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் இராணுவ புலனாய்வு பிரிவைச் சேர்ந்த இருவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்த நிலையில், கொழும்பில் வைத்து இருவரும் நேற்று கைதுசெய்யப்பட்டனர்.

 

அண்மையில் யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள நகைக் கடையொன்றுக்குச் சென்ற குழுவொன்று பொலிஸ் புலனாய்வு பிரிவு (ரிஐடி) என தெரிவித்து 30 லட்சம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்ற சம்பவம் இடம்பெற்றது.

 

குறித்த சம்பவம் தொடர்பாக செய்யப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன் குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டிருந்தனர்.

 

விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபர்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05