Jan 19, 2025 - 01:18 PM -
0
அமெரிக்காவில் டிக் டாக் சேவையை பயன்படுத்தும் பயன்பாட்டாளர்களுக்கு நேற்று (18) அந்நிறுவனம் அனுப்பியுள்ள குறுஞ்செய்தியில், டிக் டாக் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிக் டாக் சேவைகள் வழக்கம்போல செயல்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் இது சாத்தியமாகுமெனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின்னர், டிக் டாக் சேவைகளை அமெரிக்காவில் தடையின்றி பயன்படுத்த நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்படுமென டிரம்ப் குறிப்பிட்டுள்ளதாக டிக் டாக் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
டிக் டாக் சேவைக்கு தடை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதனை அமல்படுத்துவதிலிருந்து 3 மாத கால அவகாசம் விலக்களிக்க டிரம்ப் தீர்மானித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அமெரிக்க ஜனாதிபதியாக நாளை (20) பதவியேற்ற பின் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
இன்று (19) முதல், அமெரிக்காவில் சீன நிறுவனத்தின் டிக் டாக் செயலியில் பதிவிடப்படும் தகவல்கள் குறித்து சீனாவுக்கு பகிரப்படுவதாகக் கூறி, பாதுகாப்பு காரணங்களுக்காக டிக் டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடை உத்தரவானது, இன்றுமுதல் அமலில் வரவுள்ளது.
இல்லையெனில், டிக் டாக் செயலியை அமெரிக்காவுக்கு விற்றால் மட்டுமே, டிக் டாக் மீதான தடை உத்தரவு நீக்கப்படும் என்றும் கூறியது.
இந்தத் தடை உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் டிக் டாக் செயலி வழக்கு தொடர்ந்தது. இருப்பினும், அவர்களின் வழக்கைத் தள்ளுபடி செய்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே, அமெரிக்காவில் ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு பிளே ஸ்டோர்களில் டிக் டாக் செயலி இன்றுமுதல் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.