வணிகம்
DFCC வங்கியின் வரலாற்றுச் சாதனை படைத்த பசுமைப் பிணைமுறி (Green Bond) தற்போது லக்சம்பேர்க் பங்குச் சந்தையில் (LuxSE) நிரற்படுத்தப்பட்டுள்ளது

Jan 20, 2025 - 06:19 PM -

0

DFCC வங்கியின் வரலாற்றுச் சாதனை படைத்த பசுமைப் பிணைமுறி (Green Bond) தற்போது லக்சம்பேர்க் பங்குச் சந்தையில் (LuxSE) நிரற்படுத்தப்பட்டுள்ளது

வரலாற்றுச் சாதனை படைத்த தனது பசுமைப் பிணைமுறி, தற்போது லக்சம்பேர்க் பங்குச் சந்தை (Luxembourg Stock Exchange - LuxSE) மற்றும் மதிப்புமிக்க லக்சம்பேர்க் பசுமைச் சந்தை (Luxembourg Green Exchange - LGX) ஆகிய இரண்டிலும் நிரற்படுத்தப்பட்டுள்ளமை குறித்து DFCC பெருமையுடன் அறிவித்துள்ளது. 2024 செப்டெம்பரில் இலங்கையின் முதன்முதல் பசுமைப் பிணைமுறியாக மாறி, கொழும்பு பங்குச் சந்தையில் நிரற்படுத்தப்பட்டு, பிணைமுறியின் ஆரம்ப வழங்கலைத் தொடர்ந்து தற்போது இந்த சாதனை மைல்கல் நிலைநாட்டப்பட்டுள்ளது. நிலைபேற்றியல் சார்ந்த கடன் வழங்கலில் DFCC வங்கியின் தலைமைத்துவத்தை மீளவும் வலியுறுத்தும் வகையில், இலங்கை நிறுவனம் ஒன்றால் கடன் பிணைக்கான முதலாவது சர்வதேச நிரற்படுத்தலாக, 1998 ம் ஆண்டில் 10 ஆண்டு கொண்ட மிதக்கும் வீத குறிப்புடன் (Floating Rate Note) ஆரம்பித்த LuxSE உடனான நீண்ட கால உறவினை அத்திவாரமாகக் கொண்டு இச்சாதனை கட்டியெழுப்பப்பட்டுள்ளது. 

ரூபா 2.5 பில்லியன் (சுமார் 8 மில்லியன் யூரோ) தொகையை திரட்டுவதற்கு வழிவகுத்தி DFCC பசுமைப் பிணைமுறி வழங்கல் நடவடிக்கை, புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான அர்ப்பணிப்புடன் இலங்கையின் முதலாவது மூலதனச் சந்தை கடன் கருவியாகும் (capital market debt instrument). 2030 ம் ஆண்டளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியிலிருந்து 70% மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற இலங்கையின் இலக்கினை அடையப்பெறுவதற்கு ஆதரவளிப்பதற்கு, சூரிய மின்வலு உற்பத்திச் செயற்திட்டங்களுக்கு கடனளிப்பதே இதன் அடிப்படை நோக்கம். இந்த இலக்கிற்கு ஆதரவளிக்கும் அதேசமயம், பசுமைக் கடன் அடங்கலாக, நிலைபேற்றியல் சார்ந்த கடன் துறையில் தனியார் துறை முதலீட்டிற்கு உந்துசக்தியாகத் திகழ்வதே வங்கியின் நோக்கமாகும். 

LuxSE ன் பிணையங்கள் உத்தியோகபூர்வ நிரற்படுத்தலின் (Securities Official List - SOL) பிணைமுறிகளுக்கான அனுமதி, உலகளாவிய மட்டத்தில் அதன் பிரபலத்தை மேம்படுத்தி, நிலைபேற்றியல் சார்ந்த கடன்களுக்கான முன்னணி சர்வதேச தராதரமான சர்வதேச மூலதனச் சந்தை கூட்டமைப்பின் (International Capital Market Association - ICMA) பசுமைப் பிணைமுறி கோட்பாடுகளுக்கு இணங்குகின்ற DFCC வங்கியின் பசுமைப் பிணைமுறி கட்டமைப்பையும் காண்பிக்கின்றது. 

DFCC வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி திமால் பெரேரா அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “LuxSE ல் எமது பசுமைப் பிணைமுறியின் இரட்டை நிரற்படுத்தல் நடவடிக்கை, இலங்கையில் நிலைபேற்றியல் கொண்ட அபிவிருத்தியை முன்னெடுப்பதில் DFCC வங்கியின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கின்றது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் காலநிலை நடவடிக்கை மீது நிதியை முதலிடுவதனூடாக, தேசத்தில் நீடித்து நிலைக்கும் நேர்மறை மாற்றத்தைத் தோற்றுவித்து, பசுமையான மற்றும் இன்னும் கூடுதலான அளவில் நிலைபேற்றியல் கொண்ட எதிர்காலத்திற்கு பங்களிப்பதே எமது நோக்கம். இந்த நிபுணத்துவத்தின் அனுகூலத்துடன், வலிமைமிக்க சூழல், சமூகம் மற்றும் நிர்வாக ஆட்சி (ESG) கட்டமைப்புக்களைத் தோற்றுவித்து, தமது நிதித் தேவைகளுக்கு LuxSE ஐ அணுகுவதற்கு அனுசரணையளித்து, எமது வாடிக்கையாளர்களுக்கு உதவுவதில் DFCC வங்கி அர்ப்பணிப்புடன் உள்ளது,” என்று குறிப்பிட்டார். 

நிலைபேற்றியல் சார்ந்த கடன் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முயற்சிகளில் அங்கீகாரம் பெற்ற ஒரு முன்னோடி என்ற வகையில், நிலைபேற்றியலை நோக்கிய இலங்கையின் பயணத்தில் DFCC வங்கி முன்னிலை வகித்து வந்துள்ளது. நாட்டின் முதன்முதல் தனியார் துறை சிறு அளவிலான நீர் மின்னுற்பத்தி நிலைய செயற்திட்டத்திற்கு கடன் வழங்கிய வங்கியாக மாறி, பசுமை எரிசக்தி மேம்பாட்டில் தர ஒப்பீட்டு நியமத்தை நிலைநாட்டிய அதேசமயம், இலங்கையின் முதலாவது தேசிய மின்விநியோக அளவிலான காற்று, சூரிய, மற்றும் கழிவிலிருந்து எரிசக்தி முயற்சிகள் அடங்கலாக முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி செயற்திட்டங்களுக்கு இணை கடன் வசதியை வழங்கியுள்ளது. காலநிலை நடவடிக்கை மீதான தனது அர்ப்பணிப்பை மேலும் வெளிக்காண்பிக்கும் வகையில், நீண்ட கால சமூக மற்றும் பொருளாதார நெகிழ்திறனை வளர்த்து, காலநிலை விளைவுகளைக் குறைப்பதில் தீவிரமாக செயற்பட்டு, பசுமை காலநிலை நிதிக்கான (Green Climate Fund) நேரடி அணுகல் வசதியை (Direct Access Entity) கொண்ட இலங்கையின் ஒரேயொரு நிறுவனமாக DFCC வங்கி திகழ்ந்து வருகின்றது. 

LuxSE நிலைபேற்றியல் சார்ந்த கடன் நிதிக்கான தலைமை அதிகாரி லெட்டிடியா ஹமோன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “தனது அங்குரார்ப்பண பசுமைப் பிணைமுறியை நிரற்படுத்தி, LGX ல் தனது அறிமுகத்தை மேற்கொள்ளும் DFCC வங்கியை LuxSE க்கு வரவேற்பதில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளோம். நிலைபேற்றியல் சார்ந்த கடன் நிதியில் DFCC வங்கி அடைந்துள்ள பாரிய முன்னேற்றத்திற்கு இவ்வழங்கல் நடவடிக்கை சான்றுபகருவதுடன், சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் நிலைபேற்றியல் கொண்ட அபிவிருத்தி மீது கவனம் செலுத்தியுள்ள இலங்கை மற்றும் ஏனைய வளர்ந்து வரும் நாடுகளில் நிலைபேற்றியல் சார்ந்த கடன் நிதி மேம்பாட்டுக்கு அனுசரணையளித்தல் ஆகியவற்றின் மீதான எமது அர்ப்பணிப்பை காண்பிக்கின்றது,” என்று குறிப்பிட்டார். 

இந்த இரட்டை நிரற்படுத்தல் நடவடிக்கையானது இலங்கையின் நிதியியல் சந்தைகளை பன்முகப்படுத்துவதில் DFCC வங்கியின் குறிக்கோளுடன் ஒன்றியுள்ளதுடன், புத்தாக்கமான நிதியியல் தீர்வுகள் மூலமாக தேசத்தின் சமூக மற்றும் சூழல் இலக்குகளை மேம்படுத்துவதில் முன்னோடி என்ற அதன் வகிபாகத்தையும் மீள உறுதிப்படுத்தியுள்ளது. சமூக செயற்திட்டங்களையும் உள்ளடக்கி, தனது விளைவை விரிவுபடுத்தும் வகையில், தனது பசுமைப் பிணைமுறிக் கட்டமைப்பினை நிலைபேற்றியல் சார்ந்த பிணைமுறிக் கட்டமைப்பாக வளர்ச்சிபெறச் செய்யும் திட்டங்களையும் வங்கி முன்னெடுத்து வருகின்றது. 

DFCC பசுமைப் பிணைமுறியின் வெற்றிகரமான இரட்டை நிரற்படுத்தல், இலங்கையின் நிதித்துறையில் வளர்ச்சியை நோக்கிய ஒரு படியாக மாறியுள்ளதுடன், சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் அதேசமயம், நிலைபேற்றியலுக்கு அர்த்தமுள்ள வழியில் பங்களிப்பதில் தேசத்தின் நிதியியல் கருவிகளின் வளர்ச்சி வாய்ப்புக்களையும் வெளிக்காண்பிக்கின்றது. புத்தாக்கத்தை முன்னெடுத்து, நிலைபேற்றியல் சார்ந்த அபிவிருத்தியை முன்னின்று வழிநடத்திச் சென்று, DFCC வங்கியின் முன்னோடி முயற்சியானது பிராந்தியத்திலுள்ள ஏனையவர்களுக்கும் ஒரு முன்மாதிரி தர ஒப்பீட்டு நியமத்தை நிலைநாட்டியுள்ளது. 

DFCC வங்கி தொடர்பான விபரங்கள் 

1955 ம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட DFCC வங்கி பிஎல்சி, 1956 ம் ஆண்டு முதல் கொழும்பு பங்குச்சந்தையில் நிரற்படுத்தப்பட்டுள்ளதுடன், இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றாகும். இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குமுறைக்கு உட்பட்டதுடன், Fitch Ratings இடமிருந்து A- (lka) தரப்படுத்தலையும் பெற்றுள்ளது. திறைசேரி, முதலீடு மற்றும் வணிகக் கடன் தீர்வுகளுடன், தனிநபர், நிறுவன மற்றும் சிறிய, நடுத்தர அளவிலான தொழில் முயற்சிப் பிரிவுகளுக்கான விரிவான வங்கிச்சேவைகளை இவ்வங்கி வழங்கி வருகின்றது. வாடிக்கையாளரை மையப்படுத்திய சேவை மற்றும் நிலைபேற்றியல் கொண்ட புத்தாக்கம் ஆகியவற்றுக்கு முன்னுரிமையளித்துள்ள DFCC வங்கி, DFCC MySpace போன்றவை உள்ளிட்ட டிஜிட்டல் தளங்கள், 139 கிளைகளைக் கொண்ட வலையமைப்பு மற்றும் LankaPay வலையமைப்பு ஊடாக 5,500 க்கும் மேற்பட்ட ATM களுக்கான அணுகல் ஆகியவற்றை உள்ளடக்கிய இடைவிடாத மற்றும் பாதுகாப்பான வங்கிச்சேவை அனுவங்களை வழங்குகின்றது. 

நிலைபேற்றியலுக்கான நிதி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முயற்சிகளில் முன்னோடி எனப் பெயர்பெற்றுள்ள DFCC வங்கி, சூழல் மீதான தாக்கத்தைக் குறைத்து, நீண்ட கால பொருளாதார நெகிழ்திறனை வளர்ப்பதில் அர்ப்பணிப்புடன் உள்ளது. 

லக்சம்பேர்க் பங்குச் சந்தை தொடர்பான விபரங்கள் 

லக்சம்பேர்க் பங்குச் சந்தை (Luxembourg Stock Exchange - LuxSE), சர்வதேச முதலீட்டாளர்களுக்கான ஒரு நுழைவாயிலாகும். 100 நாடுகளிலுள்ள 1,750 வழங்குனர்களிடமிருந்து, 41,000 கடன் கருவிகள் அடங்கலாக, 44,000 க்கும் மேற்பட்ட நிரற்படுத்தப்பட்ட பிணையங்களுடன், சர்வதேச கடன் பிணையங்களின் நிரற்படுத்தலில் உலகின் முன்னணி சந்தைகளில் ஒன்றாக LuxSE திகழ்ந்து வருவதுடன், நிரற்படுத்தல், வர்த்தகம் மற்றும் தகவல் சேவைகளை உள்ளடக்கி, தனித்துவமான மற்றும் ஒருங்கிணைந்த சேவையை வழங்கி வருகின்றது. 

2016 ல் லக்சம்பேர்க் பசுமை (Luxembourg Green Exchange - LGX) சந்தையை LuxSE ஆரம்பித்திருந்ததுடன், நிலைபேற்றியல் சார்ந்த பிணையங்களுக்காக ஒட்டுமொத்தமாக அர்ப்பணிக்கப்பட்ட தளத்தை தொழிற்படுத்தும் உலகின் முதலாவது சந்தையாக மாறியது. நிலைபேற்றியல் சார்ந்த தயாரிப்புக்களை வழங்குபவர்கள் மற்றும் விளைவு குறித்து அவதானம் கொண்டுள்ள முதலீட்டாளர்கள் சந்திக்கும் ஒரு மையப்புள்ளியாக LGX மாறியுள்ளதுடன், 60 நாடுகளில், 340 வழங்குனர்களிடமிருந்து 2,200 க்கும் மேற்பட்ட பசுமை, சமூக, நிலைபேற்றியல் மற்றும் நிலைபேற்றியலுடன் இணைந்த பிணைமுறிகளை உள்ளடக்கியுள்ளது. உலகெங்கிலுமிருந்து நிலைபேற்றியல் சார்ந்த முதலீட்டுச் செயற்திட்டங்களுக்காக 1.2 டிரில்லியன் யூரோவுக்கும் மேற்பட்ட தொகையை மொத்தமாக திரட்டியுள்ளது. கூடுதல் விபரங்களை அறிந்து கொள்ள luxse.com இணையத்தளத்தைப் பார்க்கவும்.

Comments
0

MOST READ
01
02
03
04
05