வடக்கு
பாவற்குளத்தின் நான்கு வான்கதவுகளும் திறப்பு

Jan 20, 2025 - 10:14 PM -

0

பாவற்குளத்தின் நான்கு வான்கதவுகளும் திறப்பு

வவுனியா, பாவற்குளத்தின் நீர்மட்டம் தொடர்ந்தும் அதிகரித்து வருவதனால் அதன் 4 வான் கதவுகளும் 2 அடிக்கு மேல் திறக்கப்பட்டுள்ளதால் நெளுக்குளம் - நேரியகுளம் வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக மத்திய நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

வவுனியாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்தும் கடும் மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக பல குளங்களின் நீர் மட்டம் அதிகரித்து வான் பாய்ந்து வருவதுடன் பாவற்குளத்தின் நீர்மட்டமும் சடுதியாக அதிகரித்துள்ளது.

பாவற்குளத்தின் நீர்மட்டமானது அதன் கொள்ளளவான 19.4 அடியை அடைந்துள்ளதால், அதன் ஒரு வான் கதவுகள் இரண்டரை அடியும், மூன்று வான் கதவுகள் இரண்டு அடியும் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன், தொடர்ந்தும் மழை பெய்து வருவதனால் மேலும் வான் கதவுகள் ஊடாக நீர்பாயும் வீதத்தை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையால் குளத்து நீர் நெளுக்குளம் - நேரியகுளம் வீதியில் வௌ்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாக  அவ் வீதி ஊடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

அத்துடன் பாவற்குளத்தின் நீர் வழிந்தோடும் பகுதிகளில் உள்ள கந்தசாமி நகர், கிறிஸ்தவகுளம், பாவற்குளம் படிவம் 5,6,4,2,1, பீடியாபாமின் வேப்பங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் மிகவும் அவதானமாகவும், முன்னெச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் எனவும் மத்திய நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. 


 

--

Comments
0

MOST READ
01
02
03
04
05