Jan 21, 2025 - 10:57 PM -
0
ஹங்வெல்ல - நிரிபொல பகுதியில் சுமார் 02 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பதில் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் இலங்கை பொலிஸினால் நாடளாவிய ரீதியாக மேற்கொள்ளப்படும் குற்றம் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைக்கு இணைந்ததாக கோனஹேன பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இன்று (21) பிற்பகல் அந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரிடம் ஐஸ் போதைப்பொருள் வியாபாரத்தில் இருந்து சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு இலட்சம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹங்வெல்ல, நிரிபொல பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவராவார்.
தற்போதைய விசாரணையில், வெளிநாட்டில் இருந்து இந்நாட்டில் போதைப்பொருள் வலையமைப்பை இயக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவரால் இந்த சந்தேக நபருக்கு குறித்த ஐஸ் போதைப்பொருள் தொகை வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் ஹங்வெல்ல பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.