Jan 23, 2025 - 04:21 PM -
0
நாட்டின் முன்னோடி வர்த்தக சஞ்சிகையான LMD இன் வருடாந்த வாடிக்கையாளர் சிறப்புக் கணக்கெடுப்பின் 2024 பதிப்பில், இலங்கையின் வங்கிகள் மத்தியில் சிறந்த சேவையை வழங்கி வருவதை முன்னிட்டு கொமர்ஷல் வங்கி முதலாவதாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
LMD கணக்கெடுப்பில் வங்கித் துறையில் சிறந்த சேவைக்காக கொமர்ஷல் வங்கியானது தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக இந்த முதல் ஸ்தானத்தை பெற்றுள்ளது.
இணையத்தள ரீதியாக நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பிற்கு இந்த ஆண்டு 4,100 பதில்கள் கிடைக்கப்பெற்றது. 34 வகையான சேவை நிறுவனங்களில் சிறந்த சேவையை வழங்குவதாக அவர்கள் கருதும் ஸ்தாபனத்திற்கு வாக்களிக்குமாறு பதிலளித்தவர்கள் கேட்கப்பட்டனர்.
கொமர்ஷல் வங்கியின் பிரதம செயற்பாட்டு அதிகாரி திரு எஸ். பிரபாகர் கருத்துத் தெரிவிக்கையில், இந்த வருடத்தை சிறப்புடனும் மகிழ்ச்சியுடனும் பூர்த்தி செய்வதற்கு இந்த விருதானது வழி வகுத்துள்ளது. வாடிக்கையாளர் சேவை என்பது வங்கியில் முதன்மையானது, மேலும் ஒரு தனிப்பட்ட வாடிக்கையாளரின் குறிப்பிட்ட தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட தீர்வுகளை வழங்கும் வங்கியின் திறனை உள்ளடக்கியது. இது எங்கள் பலங்களில் ஒன்றாகும், மேலும் சேவைகளுக்கான டிஜிட்டல் அணுகலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டாலும், தொடர்ந்து கவனம் செலுத்தும் பகுதியாக இது உள்ளது. கொமர்ஷல் வங்கியின் வர்த்தக மூலோபாயத்தின் ஒரு முக்கிய அங்கமாக வாடிக்கையாளரின் நலன் விளங்குகிறது.
சேவைகள் மற்றும் தயாரிப்புகளை தொடர்ந்து மேம்படுத்த வாடிக்கையாளர்களின் கருத்துக்களை வங்கி தீவிரமாக ஒருங்கிணைக்கிறது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு அதிக தனிப்பயனாக்கப்பட்ட நிதியியல் தீர்வுகளை முன்கூட்டியே வழங்குவதற்காக தரவு பகுப்பாய்வுகளையும் பயன்படுத்துகிறது, என்று திரு பிரபாகர் கூறினார்.
கொமர்ஷல் வங்கியானது உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளில் பட்டியலிடப்பட்ட முதல் இலங்கை வங்கியாகும், மேலும் கொழும்பு பங்குச் சந்தையில் வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. வங்கியானது இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சி (SME) துறைக்கு மிகப்பெரிய கடனுதவி வழங்குவதோடு, டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியில் உள்ளது. மற்றும் இலங்கையின் முதல் 100% கார்பன் நடுநிலைமை வங்கியாகும். கொமர்ஷல் வங்கியானது நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயல்படுத்துகிறது, மேலும் இலங்கை வங்கிகளுக்கிடையில் பரந்த சர்வதேச வலையமைப்பைக் கொண்டுள்ளது, பங்களாதேஷில் 20 வங்கிக்கிளைகள், மியன்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் மற்றும் மாலைத்தீவில் பெரும்பான்மையுடன் கூடிய முழு அளவிலான முதற்தர வங்கி ஆகியவையாகும். வங்கியின் முழுச் சொந்தமான துணை நிறுவனமான CBC ஃபைனான்ஸ் லிமிடெட் அதன் சொந்த கிளை வலையமைப்பின் மூலம் பரந்த அளவிலான நிதிச் சேவைகளையும் வழங்குகிறது.