Jan 23, 2025 - 04:28 PM -
0
ரயிலில் பயணித்த இந்திய பிரஜை ஒருவரின் பயணப் பொதியை திருடியதாக சந்தேக நபர் ஒருவர் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த உடரட மெனிகே ரயிலில் பயணித்த இந்திய பிரஜை ஒருவரின் பயணப் பொதியை திருடிய சந்தேக நபர் ஒருவர் ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகளால் நேற்று (22) கைது செய்யப்பட்டு ஹட்டன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
உடரட மெனிகே ரயிலின் மூன்றாவது பெட்டியில் பயணித்த இந்திய பிரஜையின் பயணப் பொதியை, இங்குருஒயா மற்றும் கலபட ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையில் குறித்த சந்தேக நபர் திருடியுள்ளார்.
பின்னர் காணாமல் போன பயணப் பொதி குறித்து ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகளிடம் முறைபாடு செய்ததையடுத்து, பாதுகாப்பு அதிகாரிகள் சந்தேக நபரை காணாமல் போன பயணப் பொதியுடன் கைது செய்து, அவரை ஹட்டன் ரயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, அங்கிருந்து ஹட்டன் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவம் குறித்து விசாரணை நடத்திய ஹட்டன் பொலிஸ் அதிகாரிகள், சந்தேக நபர் மாவனெல்ல பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என்றும், அவர் கண்டியிலிருந்து ஹட்டனுக்கு ரயிலில் பயணிக்க ரயில் டிக்கெட் பெற்றிருந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
அண்மைக்காலமாக மலையக ரயில் பாதையில் இயக்கப்படும் பயணிகள் ரயில்களில் இதுபோன்ற திருட்டுகள் அடிக்கடி நடப்பது குறித்து ரயில்வே பாதுகாப்புப் அதிகாரிகளுக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக ஹட்டன் ரயில் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
--