சினிமா
சந்நியாசியாக மாறிய தமிழ் பட நடிகை

Jan 26, 2025 - 06:57 PM -

0

சந்நியாசியாக மாறிய தமிழ் பட நடிகை

உத்தரபிரதேச கும்பமேளாவில் நடிகை மம்தா குல்கர்னி, பெண் சாமியாராக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டார்.


பிரபல பாலிவுட் நடிகையும், மாடல் அழகியுமான மம்தா குல்கர்னி (52) என்பவர் விக்கி கோஸ்வாமியை திருமணம் செய்து கொண்டு சில ஆண்டுகள் ஆப்பிரிக்காவில் வசித்து வந்தார்.


இவர் தமிழில் விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகரன் இயக்கிய ‘நண்பர்கள்’ படத்தில் ஹீரோயினாக நடித்தவர். சினிமாவில் தொடர்ந்து நடிக்கவில்லை.


சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மும்பை திரும்பினார். உத்தரபிரதேச மாநிலத்தில் நடக்கும் மகா கும்பமேளாவின் கின்னார் அகாராவில் சன்னியாசிகளை அவர் சந்தித்தார். அவருக்கு ஆன்மீக நாட்டம் அதிகரித்துள்ளதால், தனது வாழ்க்கையை ஆன்மீகப்பணிகளில் ஈடுபடுத்திக் கொள்ள முடிவு செய்தார்.


இதுகுறித்து கின்னார் அகாரா சாமியார் லட்சுமி நாராயண் கூறுகையில், ‘ஆன்மீக நாட்டம் கொண்ட மம்தா குல்கர்னி, கடந்த 10 ஆண்டுகளாக எங்களது ஆன்மீக சேவைகளுடன் தொடர்பில் உள்ளார். தற்போது அவர் சந்நியாச வாழ்க்கை வாழ விரும்பம் தெரிவித்துள்ளார். அதனால் அவருக்கு சந்நியாசம் வழங்கப்பட்டது. இனிமேல் அவர் ‘யமை மம்தா நந்தகிரி’ என்று அழைக்கப்படுவார்’ என்று கூறினார். 
இந்நிலையில் மம்தா குல்கர்னி, பெண் சாமியார்கள் அணியும் காவி உடைகளை அணிந்திருக்கும் தனது புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நடிகையாக இருந்து பெண் சாமியாராக மாறிய மம்தா குல்கர்னியை சமூக ஊடகங்களில் வாழ்த்தியும், விமர்சித்தும் பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.


கடந்த 1990ம் ஆண்டளவில் சினிமாவில் கொடிகட்டி பறந்த மம்தா குல்கர்னி, கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நான் கடந்த 2000ம் ஆண்டு முதல் அதிக ஆன்மீக நாட்டத்தில் உள்ளேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு எனது கனவு நனவாகி உள்ளது. தற்போது நான் சந்நியாசியின் வாழ்க்கையை ஏற்றுக்கொண்டேன். இனிமேல் எனது வாழ்க்கை முறையும் பெண் சந்நியாசிக்கு உரிய விதமாக இருக்கும்’ என்று கூறினார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05