செய்திகள்
அதானியிடம் குறைந்த விலையில் மின்சாரத்தை பெற கலந்துரையாடல்

Jan 28, 2025 - 03:50 PM -

0

அதானியிடம் குறைந்த விலையில் மின்சாரத்தை பெற கலந்துரையாடல்

அதானி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தின் கீழ் மின்சார கொள்முதல் விலையை 6 சத டொலருக்கும் குறைவாகக் குறைப்பது குறித்து கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

 

இன்று (28)  நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

 

கடந்த வாரம், இலங்கை அரசாங்கம் அதானி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்ததாக சில ஊடக அறிக்கைகள் வெளிவந்தன, ஆனால் பின்னர் இலங்கை அரசாங்கமும் அதானியும் அந்த ஊடக அறிக்கைகளை மறுத்தன.

 

இந்நிலையில், இந்த திட்டம் ரத்து செய்யப்படாது என்று அமைச்சரவை பேச்சாளர் இன்று அறிவித்தார். 

 

அதானி குழுமத்தின் எரிசக்திப் பிரிவான அதானி கிரீன் எனர்ஜி, இலங்கையின் மன்னார் மற்றும் பூநகரி பகுதிகளில் இரண்டு காற்றாலை மின்ஆலைகளை நிர்மாணிப்பதற்கு இலங்கையுடன் ஒப்பந்தம் செய்வதற்கு கடந்த வருடம் அமைச்சரவை அனுமதி அளித்திருந்ததது. 

 

அதானி நிறுவனம் ஒரு அலகு மின்சாரத்திற்கு 8.25 அமெரிக்க சத டொலர் விலை கேட்டுள்ளதாகவும், போட்டி ஏலம் இல்லாமல் இந்த திட்டங்களை அதிக அலகு விலைக்கு வழங்கியது குறித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

இத்தகைய பின்னணியில், இந்தத் திட்டங்களின் தொடக்கம் தற்போது நிறுத்தப்பட்டுள்ள நிலையில், விலையைக் குறைக்க முடியும் என்று தான் நம்புவதாக இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்தார்.

 
 


 

Comments
0

MOST READ
01
02
03
04
05