Jan 30, 2025 - 05:10 PM -
0
இரத்மலானை பகுதியில் மது போதையில் வாகனம் செலுத்தியதோடு, முச்சக்கர வண்டி மீது மோதிவிட்டு தப்பிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
விபத்தில் சிக்கிய பொலிஸ் ஜீப்பும் முச்சக்கர வண்டியும் விபத்துக்குள்ளாகும் காட்சியும், பின்னர் ஜீப் நிற்காமல் தொடர்ந்து செல்வதை காட்டும் காணொளியொன்று சமீபத்தில் சமூக ஊடகங்களில் பரவியது.
இந்தச் சம்பவம் 28.01.2025 அன்று இரத்மலானை பகுதியில் இடம்பெற்றதாகவும், அதே நாளில் கல்கிஸை பொலிஸார் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி ஜீப் வாகனத்தை செலுத்திய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரைக் கைது செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது அவர் மது போதையில் வாகனம் செலுத்தியது உறுதி செய்யப்பட்டதோடு, சந்தேக நபர் கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக கல்கிஸை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


