Jan 31, 2025 - 10:28 AM -
0
ஒன்பதாவது ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கட் தொடர் பெப்ரவரி 19ஆம் திகதி முதல் மார்ச் 9ஆம் திகதி வரை பாகிஸ்தான் மற்றும் டுபாயில் நடைபெறுகிறது.
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய போட்டிகள் மாத்திரம் டுபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது.
மொத்தம் 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு சம்பியன்ஸ் கிண்ண தொடரில் விளையாட உள்ளன. இந்த நிலையில், சம்பியன்ஸ் கிண்ண தொடர் தொடங்கும் முன்பு இதில் பங்கேற்கும் அணிகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் போட்டோஷூட் நடைமுறையை ஐ.சி.சி. ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக போட்டோஷூட்டில் பங்கேற்க இந்திய அணித்தலைவர் ரோஹித் சர்மா பாகிஸ்தானுக்கு செல்ல மாட்டார் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில், போட்டோஷூட் நிகழ்ச்சியை ஐ.சி.சி. இரத்து செய்துவிட்டதாக கூறப்படுகிறது. போட்டோஷூட் இரத்துச் செய்யப்பட்ட நிலையில், சம்பியன்ஸ் கிண்ண தொடக்க விழா இந்த தொடரின் முதல் போட்டிக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே நடைபெறும் என்று தெரிகிறது.