Jan 31, 2025 - 02:21 PM -
0
மலேசியாவில் நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்ட மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு தென்னாப்பிரிக்க மகளிர் அணி இன்று (31) தகுதி பெற்றது.
கோலாலம்பூரில் நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்க மகளிர் அணி அவுஸ்திரேலிய மகளிர் அணியை 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 105 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
அதன்படி, 106 ஓட்டங்கள் என்ற இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்கா அணி, போட்டியின் 19வது (18.1) ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து இலக்கை அடைந்தது.
தென்னாப்பிரிக்க இளையோர் மகளிர் அணி ஒன்று இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவது இதுவே முதன்முறையாகும்.
இந்த போட்டியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி தற்போது நடப்பு சாம்பியனான இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.

