Feb 2, 2025 - 12:12 PM -
0
பயாகல மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஐஸ் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட ஒருவரை களுத்துறை குற்றப்பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில், சந்தேக நபரிடமிருந்து சுமார் 1.5 மில்லியன் ரூபா மதிப்புள்ள ஐஸ் போதைப்பொருட்களையும் பொலிஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சந்தேக நபர் நீண்ட காலமாக பயாகல, மக்கோன, பேருவளை, வெலிபென்ன, அளுத்கம மற்றும் தொடங்கொட போன்ற பல்வேறு பகுதிகளுக்கு போதைப்பொருள் விநியோகத்தை மேற்கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், தற்போது வெளிநாட்டுக்கு தப்பிச்சென்று போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் 'பொடி பெட்டி'யின் உதவியாளர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைதானவர் 41 வயதுடைய "லால்மோலா" என்ற புனைப்பெயரில் அழைக்கப்படும் சந்தேக நபர் என்றும், பயாகல, மந்திரிகொட பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஐஸ் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டிருந்த போது நேற்று (01) மாலை களுத்துறை குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டதாகவும் தெரியவருகிறது.
இந்த சந்தேக நபர் ஐஸ் போதைப்பொருள் வியாபாரம் செய்ததற்காக பல முறை சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் இன்று களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.