செய்திகள்
கொள்கலன் நெரிசல் நிறைவு?

Feb 4, 2025 - 11:42 AM -

0

கொள்கலன் நெரிசல் நிறைவு?

துறைமுகத்தில் கொள்கலன் நெரிசல் பெரும்பாலும் முடிவுக்கு வந்துள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது.

 

இது தொடர்பில் "அத தெரண" தொடர்பு கொண்டு வினவிய போது, ​​நெரிசல் முழுமையாக நீங்கவில்லை என்றாலும், ஓரளவுக்கு குறைந்துள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

இதற்கிடையில், துறைமுகத்தில் உள்ள கொள்கலன் நெரிசலுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக இலங்கை வார்ஃப் சேவைகள் சங்கத்தின் செயலாளர் இர்ஷாத் நியாஸ் தெரிவித்தார்.

 

நேற்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இலங்கை வார்ஃப் சேவைகள் சங்கத்தின் செயலாளர் இவ்வாறு தெரிவித்தார்.

 

நான்கு பகல் - இரவு நேர நடவடிக்கைக்குப் பிறகு, கொள்கலன் நெரிசலை சரிசெய்ய முடிந்தது என்றும், ஜனாதிபதி உட்பட அனைவருக்கும் அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

 

தற்போதைய அரசாங்கம் நியமிக்கப்படுவதற்கு முன்பே துறைமுகத்தில் கொள்கலன் நெரிசல் இருந்ததாகவும் இலங்கை வார்ஃப் சேவைகள் சங்கத்தின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

 

துறைமுகத்தில் கொள்கலன் நெரிசல் காரணமாக நாடு பெருமளவு டொலர்களை இழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 

இதற்கிடையில், கொள்கலன் வாகனங்களை நிறுத்துவதற்காக ப்ளூமெண்டல் பகுதியில் நிர்மாணிக்கப்படும் முற்றத்தின் பணிகள் குறிப்பிடத்தக்க அளவிற்கு முடிக்கப்பட்டு விரைவில் சுங்கத்திடம் ஒப்படைக்கப்படும் என்று இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவர் ஓய்வுபெற்ற அட்மிரல் சிரிமெவன் ரணசிங்க தெரிவித்தார்.

 

நேற்று (03) அந்தப் பகுதிக்கான கண்காணிப்பு விஜயத்தின் போது அவர் இதனை தெரிவித்தார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05