வடக்கு
சுதந்திரதின எதிர்ப்பு போராட்டம்

Feb 4, 2025 - 03:50 PM -

0

சுதந்திரதின எதிர்ப்பு போராட்டம்

கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (04) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

 

77 ஆவது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளில் சங்கத்தினரின் ஏற்பாட்டில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட குறித்த  ஆர்ப்பாட்டப் பேரணி கிளிநொச்சிச்சி பழைய கச்சேரி வரை முன்னெடுக்கப்பட்டது.

 

இப்போராட்டத்துக்கு வலுச் சேர்க்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன், சிவாஜிலிங்கம் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

 

தொடர்ந்து சுதந்திர தின அறிக்கை வாசிக்கப்பட்டது. அதில், இலங்கையின் சுதந்திர தினமான பிப்ரவரி நான்காம் திகதி தமிழ் தேசத்தின் கரிநாள் என நாம் பிரகடனப்படுத்தியுள்ளோம். இத்தீவின் வடக்கு கிழக்கை தாயகமாகக் கொண்ட தமிழ் தேசத்தை ஆக்கிரமித்திருந்த ஆங்கிலேயர் தாம் கொண்டிருந்த ஆக்கிரமிப்பு மேலாதிக்கத்தை இத்தீவின் பெளத்த சிங்கள் தேசத்திடம் தாரைவார்த்த நாளே கரிநாளாகும்.

 

1948 ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்ட நாளிலிருந்து தமிழர்கள் தமது வாழ்வாதாரங்களை ஒவ்வொரு துறையிலும் இழக்கத் தொடங்கினர்.

 

1956 இல் கொண்டுவரப்பட்ட தனிச் சிங்கள சட்டமூலம் நமது மொழி. பண்பாட்டுப் படுகொலையின் தொடக்கமாகும்.

 

1958 ஆம் ஆண்டும் அதன் பின்னரும் நடைபெற்ற திட்டமிடப்பட்ட இனக் கலவரமும், இனப்படுகொலையும்.

 

1970 லும் அதன் பின்பும் தமிழ் மாணவர்களின் பல்கலைக்கழக தரப்படுத்தலின் ஊடாக தமிழர்கள் பல்கலைக்கழக கல்வி பெறுவது தடுக்கப்பட்டது.

 

1978 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குடியரசு யாப்பின் மூலம் இலங்கை ஒரு பௌத்த சிங்கள நாடாக பிரகடனப்படுத்தப்பட்டது.

 

1981 ஆம் ஆண்டு இலங்கை ஜனாதிபதியாக இருந்த ஜேஆர் ஜெயவர்த்தன தலைமையிலான சிங்கள அரசின் அமைச்சர்களான காமினி திசாநாயக்க ஸ்ரீல் மத்தியூ முதலியோர் தலைமையிலான குழுவினரும் அவர்களுடன் ராணுவமும் பொலிஸ் முன்னின்று யாழ்ப்பாண பொது நூலகத்தை எரித்தமை இன்னொரு இன அழிப்பின் உச்சத்தை காட்டியது.

 

இலங்கையை ஆண்டு வந்த பல்வேறு சிங்கள அதிபர்களால் தொடர்ந்து பல்வேறுபட்ட வழிகளில் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற இனப்படுகொலைகளில் நாகர்கோவில் விமான குண்டு தாக்குதல், நவாலி சென் பீட்டர் தேவாலய தாக்குதல், நூற்றுக்கணக்கான செம்மணி புதைகுழிகள் போன்ற இனப்படுகொலைகள், இனப்படுகொலைகளின் சாட்சி பகிரும்.

 

அதேபோல் கடந்த சில தசாப்தங்களாக சிங்கள இராணுவத்தால் தொடர்ந்து நடாத்தப்பட்ட கொலை, கற்பழிப்பு, சித்திரவதை, வலிந்து காணாமல் ஆக்கப்படுத்தல் ஆகியவும் ஓர் சாதாரண நாளாந்த நிகழ்வுகளாயின.

 

இப்படியே இன்னும் பட்டியல் நீண்டு சென்று 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலம் வரை நிகழ்ந்தது. இன்று வரை எந்த நீதியும் இன்றி உள்நாட்டு பொறிமுறையால் திட்டமிடப்பட்ட இனப்படுகொலைக்கு நீதி கிடைக்காமல் நாம் சர்வதேச நீதி பொறிமுறையை வேண்டி போராடிக் கொண்டிருக்கிறோம் என தெரிவித்தனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05