Feb 6, 2025 - 06:18 PM -
0
யாழ் மாநகர சபையின் மனிதாபிமானமற்ற செயற்பாட்டை கண்டித்தே தாம் வியாபார நடவடிக்கைகளை இடைநிறுத்தி இந்த போராட்டத்தை இன்றையதினம் (06) முன்னெடுத்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரிவிக்கையில், திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா யாழ் மாநக முதல்வராக இருந்தபோது இந்த கடைகள் எமக்கு வழங்கப்பட்டன. இதற்காக நாம் யாழ் மாநகரசபைக்கு ஆரம்பதில் 3000 ரூபாவும் தற்போது 7500 ரூபாவும் வரியாக செலுத்தி வருகின்றோம். இந்நிலையில் தற்போதும் மேலும் 300 ரூபா வரி உயர்வு என கூறுகின்றனர் அதையும் நாம் ஏற்றுக்கொள்கின்றோம்.
இதேநேரம் கடைகளின் முகப்பு போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாக அதிகாரிகள் எம்மிடம் தெரிவித்ததற்கு இணங்க அதையும் சில அடிகள் உள்ளே எடுப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளோம். இதேநேரம் வாழ்வாதாரத்தினை அடிப்படையாகக் கொண்டு கடைகளை அமைத்து ஏறக்கறைய 15 ஆண்டுகளுக்கும் மேலாக நாம் தொழிலில் ஈடுபட்டு வரும் நிலையில் ஒரு கடையில் குறைந்தது மூன்று பேர் வேலை செய்கின்றனர். இங்கு 31 கடைகள் உள்ளன. இவற்றில் குறைந்தது 100 பேர் தொழில் செய்கின்றனர். அதுமட்டுமல்லாது 100 குடும்பங்களின் வாழ்வாதாரம் இதில் தங்கியுள்ளது.
இந்நிலையில் யாழ் மாநகரசபையின் அதிகாரிகள் எமது கடைகளின் அளவை குறைத்து அடையாளமிடும் நடவடிக்கையை நேற்றையதினம் முன்னெடுத்திருந்தனர்.
அதற்கு நாம் எதிர்ப்பு காட்டியதை அடுத்து அது தடுத்து நிறுத்தப்பட்டது. ஏற்கனவே 6 அடிகள் தான் ஒரு கடைக்கான இடப்பரப்பாக வழங்கப்பட்டது . இந்த 6 அடிக்குள் பொருட்கள், பழங்களை வைத்து விற்பனை செய்யும் தளபாடங்கள், குறைந்தது 3 வியாபாரிகள் என வியாபார நடவடிக்கைகளை கடும் சிரமத்தின் மத்தியில் மேற்கொண்டு வருகின்றோம்.
இந்நிலையில் அந்த 6 அடி அகலத்தையும் மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்க தற்போது முயற்சி செய்து அதற்கான அடையாளமிடலுக்காக நேற்றையதினம் வருகை தந்து நடவடிக்கை மேற்கொள்ள முயற்சித்தனர். அதற்கு நாம் கடும் எதிர்ப்பு தெரிவித்து அந்த நடவடிக்கையை நிறுத்தியிருந்தோம்.
அதுமட்டுமல்லாது பல்வேறு கடன்களை பெற்றே நாம் இந்த சிறு முதலீடுகளை மேற்கொண்டுள்ளோம். இதன் வருமானத்தை வைத்தே பிள்ளைகள் இன்று கல்வி கற்று வருகின்றார்கள். மாநகரசபையின் இந்த செயற்பாட்டால் அவர்களுடைய நிலையும் கவலைக்கிடமானதாக முடியும்.
தொடர்ந்து மாநகர சபை இவ்வாறு செய்யுமாக இருந்தால் நாங்கள் அனைவரும் பண்ணை கடலில் குதிப்பதே எங்கள் முடிவு என தெரிவித்தனர்.
--