Feb 6, 2025 - 07:27 PM -
0
பங்களாதேஷில் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அரசு பணிகளில் இடஒதுக்கீடு வழங்கும் முடிவை எதிர்த்து மாணவர்கள் நடத்திய போராட்டங்களில் ஏற்பட்ட வன்முறையில் 450இற்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
மாணவர்களின் போராட்டங்களுக்கு அடிபணிந்து கடந்த ஓகஸ்ட் 5ஆம் திகதி ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வௌியேறி தற்போது இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து பங்களாதேஷில் பொருளாதார நிபுணர் டாக்டர். முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்துள்ளது. ஷேக் ஹசீனா மீது 42 கொலை வழக்குகள் உள்பட 51 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் பங்களாதேஷில் இடைக்கால அரசின் உள்துறை ஆலோசகர் லெப்டினன்ட் ஜெனரல்(ஓய்வு) எம்டி ஜஹாங்கீர் ஆலம் சவுத்ரி டாக்காவில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது ஆலம் சவுத்ரி தெரிவித்ததாவது, “பங்களாதேஷின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், ஷேக் ஹசீனா மற்றும் முன்னாள் அமைச்சர்கள், அதிகாரிகளின் இனப்படுகொலைக்கு எதிராக கைது பிடியாணைகளை பிறப்பித்துள்ளது. அதன்படி தற்போது பங்களாதேஷில் உள்ளவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
ஹசீனா உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகள் தற்போது நாட்டில் இல்லை. வௌிநாடுகளுக்கு தப்பியோடிய அவர்களை திரும்ப அழைத்து வர யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இது தொடர்பாக தேடப்படும் நபர்களுக்கு எதிராக இன்டர்போல் விரைவில் அறிவிப்பை வௌியிடும்” என்று தெரிவித்தார்.