Feb 6, 2025 - 08:51 PM -
0
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் அறையில் நேற்று (05) இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக தரம் உயர்த்துவதன் அவசியத்தை போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் ஆளுநருக்கு எடுத்துக்கூறினார்.
அத்துடன் ஆளணி வெற்றிடங்கள் நீண்ட காலமாக மீளாய்வு செய்யப்படவில்லை என்பதுடன் ஏனைய வைத்தியசாலைகளுடன் ஆளணிகளை ஒப்பிட்டு போதனா வைத்தியசாலைக்கான ஆளணியின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டியதன் தேவைப்பாடுகளையும் பணிப்பாளர் விளக்கமாகக் குறிப்பிட்டார்.
மேலும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சேவைகளை திறம்பட மேற்கொள்வதற்கும் நீண்ட கால நோக்கிலான 10 மாடியிலான புதிய கட்டடத்தின் தேவைப்பாடுகளையும் அதற்கான வரைபடத்தையும் ஆளுநருக்கு காண்பித்து போதனா வைத்தியசாலைப் பணிப்பாளரால் விளக்கமளிக்கப்பட்டது. இதற்கான நிதியைப் பெற்றுத்தருமாறும் ஆளுநரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
--