Feb 7, 2025 - 05:48 PM -
0
வரலாற்றுச் சிறப்பு மிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கான முன்னாயர்த்தக் கூட்டம் இன்று (07) காலை இடம்பெற்றது.
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் 14 ஆம், 15 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.
இது தொடர்பான முன்னாயர்தக் கூட்டம் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
இதன் பிரகாரம் எதிர்வரும் கச்சதீவு அந்தோனியார் திருவிழாவில் 4,000 இலங்கை பக்தர்களையும், 4,000 இந்திய பக்தர்களையும், மதகுருமார்கள், உத்தியோகத்தர்கள் உள்ளடங்களாக 1,000 நபர்களும் அனுமதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இக் கூட்டத்தில் இந்தியத் தூதரக அதிகாரிகள், கடற்படையினர், இராணுவத்தினர், பொலிஸார், ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை, திருவிழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து துறைசார் தரப்பினருடன் மேற்கொண்ட நீண்ட நேர கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்தத் தெரிவித்த அரச அதிபர் பிரதீபன் கூறுகையில்,
திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்வதற்காக குறிப்பாக குடிநீர், மலசலகூடம், சுகாதாரம் பேணல், சுகாதார சேவைகள், பேருந்து போக்குவரத்து, கடற் போக்குவரத்து உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன.
இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் உள்ளிட்ட அதிகாரிகள் தயாராகியுள்ளனர்.
சிறந்த பேருந்து போக்குவரத்து சேவையை முன்னெடுக்க இ.போ.ச மற்றும் தனியார் பேருந்து சேவையில் ஈடுபடும் தரப்பினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று கடல் போக்குவரத்து சேவையும் மேற்கொள்ளவுள்ள படகுகளின் தரம் தொடர்பில் கடற்படையினர் ஆய்வுகளை மேற்கொள்ள அனுமதிகள் வழங்கப்படவுள்ளது. அத்துடன் கடல் போக்குவரத்து சேவைக்கான கட்டணங்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நெடுந்தீவில் இருந்து கச்சதீவுக்கான ஒரு வழி கடல் போக்குவரத்து கட்டடணமாக 1,000 ரூபாவும், குறிகாட்டுவன் துறைமுகத்தில் இருந்து 1,300 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வருகைதரும் யாத்திரிகர்களுக்கு உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
--

