விளையாட்டு
கே எல் ராகுல் சோலியை முடிக்க திட்டம்?

Feb 8, 2025 - 11:24 AM -

0

கே எல் ராகுல் சோலியை முடிக்க திட்டம்?

கே.எல். ராகுல், திறமையான கிரிக்கெட் வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையைப் பார்த்தால், ஏதோ ஒரு தடுமாற்றம் இருக்கிறது. இதற்கு காரணம் என்ன? இந்திய அணியின் நிர்வாகம் தான் காரணமா?

 

ராகுல் தான் உலகிலேயே தனது துடுப்பாட்ட வரிசை நிலையாக இல்லாத ஒரே வீரராக இருக்கிறார். இது அவரது ஆட்டத்தை வெகுவாக பாதிக்கிறது. பிளேயிங் லெவனில் ராகுலை தேர்வு செய்ய இது காரணமாக இருந்தாலும், அதுவே அவருக்கு எதிரான ஒரு விஷயமாகவும் உள்ளது. அவரால் சமீப காலமாக சரியாக ஓட்டங்களை குவிக்க முடியவில்லை. அவரது தன்னம்பிக்கையும் பாதிக்கப்பட்டு உள்ளது.

 

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியிலும் அவருக்கு எதிரான ஒரு முடிவைத் தான் இந்திய அணி நிர்வாகம் எடுத்தது என்ற விமர்சனம் எழுந்தது. அந்தப் போட்டியில் அவருக்கு முன் அக்சர் பட்டேல் களமிறக்கப்பட்டார். ஆறாம் வரிசையில் இறங்கிய ராகுல் 2 ஓட்டங்களை மட்டுமே எடுத்தார். 

 

எந்த இடத்தில் இறங்க வேண்டும் என்ற தெளிவு இல்லாததால், அவரால் எந்த போட்டியிலும் தனது திறமையை முழுமையாக வெளிப்படுத்த முடியவில்லை. இதன் காரணமாக, அவர் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் தனது இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் தடுமாறி வருகிறார். டி20 அணியில் இருந்து கூட நிரந்தரமாக வெளியேற்றப்பட்டுள்ளார்.

 

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், அவரது ஐந்தாவது இடத்தில் அக்சர் படேல் இறங்கி அரை சதம் அடித்தார். ஆனால் ராகுல் வெறும் 2 ஓட்டங்களை மட்டுமே எடுத்தார். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ரோஹித் சர்மா இல்லாததால், முதல் போட்டியில் ராகுல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார்.

 

ரோஹித் சர்மா அணிக்கு திரும்பியதும், ராகுல் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். இது போன்ற சம்பவங்கள் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் அடிக்கடி நடக்கின்றன. முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஐந்தாம் வரிசையில் இறங்க வேண்டிய ராகுலை ஆறாம் வரிசையில் இறக்கியதை சுட்டிக் காட்டினார்.

 

'இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா தவிர வேறு யாரும் சரியாக விளையாடவில்லை. ஆனால் கே.எல். ராகுல் மட்டும் அணியிலிருந்து நீக்கப்பட்டார். விராட் கோலி கூட சரியாக விளையாடவில்லை, ஆனால் அவர் அணியில் இருந்தார்.' என்று அவர் கூறினார். 

 

சஞ்சய் பங்கர் கூட ராகுலுக்கு நேரும் இந்த அநீதியை பற்றி பேசினார். 'அணி நிர்வாகம் பல விஷயங்களை கருத்தில் கொண்டுதான் முடிவெடுக்கிறது. இருப்பினும், ராகுலை நியாயமாக நடத்த வேண்டும் என்று நான் அணி நிர்வாகத்திடம் கூற விரும்புகிறேன்,' என்று அவர் தெரிவித்தார்.

 

ராகுலின் தடுமாற்றத்திற்கு காரணம் அவரது திறமையின்மையா அல்லது அணி நிர்வாகத்தின் குழப்பமான அணுகுமுறையா என பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05