Feb 8, 2025 - 06:39 PM -
0
இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் அவுஸ்திரேலியா அணி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 2 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 257 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. அவுஸ்திரேலியாவின் குஹ்னேமன், நாதன் லயன் மற்றும் ஸ்டார்க் மூன்றுபேரும் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். இலங்கையில் அதிகபட்சமாக சண்டிமால் 74, குசால் மெண்டீஸ் 85 ஓட்டங்கள் பெற்றனர்.
இலங்கையை தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடிய அவுஸ்திரேலியா அணியில் தலைவர் ஸ்டீவ் ஸ்மித், முதல் போட்டியை தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சதமடித்து அசத்தினார். உடன் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியும் சதமடிக்க, அவுஸ்திரேலியா அணி 3 விக்கெட் இழப்புக்கு 330 ஓட்டங்களுடன் இரண்டாவது நாளை முடித்தது.
வலுவான நிலையில் 3 ஆவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த அவுஸ்திரேலியா அணிக்கு இலங்கையின் சுழற்பந்துவீச்சாளர் பிரபாத் ஜயசூர்ய அதிர்ச்சி கொடுத்தார். 330 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகள் என தொடர்ந்த அவுஸ்திரேலியா பிரபாத் ஜயசூர்யவின் அபாரமான பந்துவீச்சால் அடுத்த 84 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதை தொடர்ந்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் 20 போட்டிகளில் விளையாடி 11 ஆவது டெஸ்ட் ஃபைஃபெரை கைப்பற்றி அசத்தினார் பிரபாத் ஜயசூர்ய.
அதுமட்டுமில்லாமல் காலி மைதானத்தில் விளையாடிய 10 டெஸ்ட் போட்டிகளில் 9 ஆவது முறையாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்தார் பிரபாத் ஜயசூர்ய.
அவுஸ்திரேலியாவை தொடர்ந்து 157 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தமது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி இன்றை ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 211 ஓட்டங்களை பெற்றுள்ளது.