விளையாட்டு
மைதானத்தில் சுருண்டு விழுந்த ரச்சின்

Feb 9, 2025 - 10:51 AM -

0

மைதானத்தில் சுருண்டு விழுந்த ரச்சின்

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, பாகிஸ்தானுடன் முத்தரப்பு ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவுக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.

 

38 ஆவது ஓவரின் போது, ரச்சின் ரவீந்திரா பந்தை கேட்ச் பிடிக்க ஓடி வந்தார். ஆனால் பந்தை சரியாக பார்க்க முடியாததால் அவரது முகத்தில் பந்து தாக்கியது. அதனால் இரத்தம் வடிய அவர் கீழே சாய்ந்தார். பின்னர் வைத்தியர்கள் அவரை மைதானத்தை விட்டு அழைத்துச் சென்றனர்.

 

இதையடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் மைதானத்தில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

 

பாகிஸ்தானில் சமீபத்தில் மைதானங்களை புதுப்பிக்கும் பணி நடைபெற்றது. 2025 சாம்பியன்ஸ் கிண்ண தொடரை முன்னிட்டு இந்தப் பணி நடந்தது.

 

இந்த நிலையில் தான், லாகூர் மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. போட்டியின் போது இரவு நேரத்தில் மின் வெளிச்சம் போதிய அளவில் இல்லை என்ற விமர்சனம் எழுந்தது. மைதானத்தில் இருந்த மின் விளக்குகள் போதிய அளவில் வெளிச்சத்தை அளிக்கவில்லை.

 

நியூசிலாந்து அணி பகலில் துடுப்பெடுத்தாடிய போது இந்த பிரச்சனை எதுவும் இல்லை.

 

நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்களில் 330 ஓட்டங்களை பெற்றது. அடுத்து பாகிஸ்தான் அணி துடுப்பெடுத்தாடி கொண்டிருந்த போது, இரவு நேரம் என்பதால் நியூசிலாந்து அணியின் வீரர்கள் அவ்வப்போது சிரமத்தை எதிர்கொண்டனர்.

 

மின் வெளிச்சம் இல்லாததால் அவர்களால் பந்தை சரியாக பார்க்க முடியவில்லை. 38 ஆவது ஓவரின் போது, குஷ்தில் ஷா அடித்த பந்தை பிடிக்க ரச்சின் ரவீந்திரா முயன்றார். அது ஒரு எளிதான கேட்ச் வாய்ப்பு தான். ஆனால் பந்து அருகில் வந்த போது ரச்சின் ரவீந்திராவால் சரியாக பார்க்க முடியவில்லை. அதனால் அது அவரது முகத்தை தாக்கியது. மின் வெளிச்சம் சரியாக இருந்திருந்தால், அவர் முன்கூட்டியே பந்து எங்கே வருகிறது என்பதைச் சரியாக பார்த்திருப்பார்.

 

பந்து மேலே இருந்தபோது மின் வெளிச்சம் இருந்ததால் அவர் கேட்ச் பிடிக்க தயாரானார். ஆனால் பந்து கீழே வந்தபோது மின் வெளிச்சம் சரியாக இல்லாததால் அவரால் திடீரென ஏற்பட்ட வெளிச்ச மாற்றத்தை எதிர்கொள்ள முடியாமல் போய், பந்து எங்கே வருகிறது என்று தெரியாமல் இந்த சம்பவம் நடந்துள்ளது.

 

இதனைப் பலரும் சுட்டிக்காட்டி, உடனடியாக பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு மின்விளக்குகளின் பிரச்சனையை சரி செய்ய வேண்டும் எனக் கூறி வருகின்றனர். இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணியின் கிளென் பிலிப்ஸ் 106 ஓட்டங்களையும், டேரில் மிட்செல் 81 ஓட்டங்களையும் பெற்றனர். எனினும் பாகிஸ்தான் அணி 252 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. நியூசிலாந்து அணி 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றமை குறிப்பிட்டதக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05