Feb 9, 2025 - 04:49 PM -
0
அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள டிரம்ப், சட்ட விரோத குடியேற்றத்தை தடுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார். மேலும் ஏற்கனவே அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியுள்ள வெளிநாட்டினரை வெளியேற்றவும் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறி இருப்பவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் முதற்கட்டமாக நேற்று (08) 104 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர். கைகளில் விலங்கு பூட்டப்பட்டு கால்களில் சங்கிலியால் கட்டப்பட்டு அமெரிக்க ராணுவ விமானத்தின் மூலம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸுக்கு கொண்டு வரப்பட்டனர்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது. இதனை பார்த்த நெட்டிசன்கள், இந்தியர்களை கைதிகளை போல் அமெரிக்க அரசு நடத்துவதாக கண்டனம் தெரிவித்தனர்.
எதிர்க்கட்சிகளும் இந்த சம்பவத்தை பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. மேலும் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரச்சனையில் ஈடுபட்டன. இதையடுத்து இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் இந்த சம்பவம் குறித்து மாநிலங்களவையில் விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், இந்தியர்களை இதுபோன்று தவறாக நடத்த வேண்டாம் என கூறியிருப்பதாக தெரிவித்தார்.
மேலும் கை மற்றும் கால்களில் விலங்கிட்டதால் இந்தியர்கள் எவ்வளவு சிரமம் அடைந்தனர் என்பதை பகிர்ந்துக்கொண்டனர் என்றும் குறிப்பிட்டார். சட்டவிரோதமாக குடியேறிவர்களை வெளியேற்றும் போது கைவிலங்கிடுவது வழக்கமான ஒன்றுதான் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் அமெரிக்க எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் இந்தியர்களை ஏலியன் எனக் குறிப்பிட்டு, கை, கால்களில் விலங்கிடப்பட்டிருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்த அவரது பதிவில் "USBP மற்றும் கூட்டாளிகள் சட்டவிரோத வெளிநாட்டினரை இந்தியாவிற்கு வெற்றிகரமாக திருப்பி அனுப்பினர், இது ராணுவ போக்குவரத்தைப் பயன்படுத்தி இதுவரை மேற்கொள்ளப்பட்ட மிக நீண்ட நாடுகடத்தல் விமானமாகும். குடியேற்றச் சட்டங்களை அமல்படுத்துவதற்கும் விரைவான வெளியேற்றங்களை உறுதி செய்வதற்கும் எங்கள் உறுதிப்பாட்டை இந்த பணி அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. நீங்கள் சட்டவிரோதமாகக் எல்லைத் தாண்டினால் வெளியேற்றப்படுவீர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், இந்தியர்கள் ஏலியன்களா என கேட்டு விளாசி வருகின்றனர். இதனிடையே சட்டவிரோதமாக குடியயேறியவர்களை நாடு கடத்துவது இயல்பான ஒன்றுதான் என அமெரிக்க தூதரகம் விளக்கம் அளித்துள்ளது.