Feb 10, 2025 - 11:11 AM -
0
60 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்துடன் இலங்கையின் முன்னணி பிஸ்கட் உற்பத்தியாளராகத் திகழ்ந்து வருகின்ற மலிபன் குழுமத்தின் விவசாய அங்கமான Maliban Dairy and Agri Products (Pvt) Limited நிறுவனம், Maliban pure harvest நாமத்தின் கீழ் TOMEJC என்ற உயர் வகை மாம்பத்தை உற்பத்தி செய்யும், அதன் மொனராகலை, எத்திமல கொட்டியாகல மாந்தோட்டத்திற்கு மதிப்புமிக்க GLOBAL G.A.P (Good Agricultural Practices) சான்று அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. தனது நடைமுறைகளில் தரம் மற்றும் நிலைபேற்றியல் குறித்து அதியுயர் தராதரங்களுக்கு கீழ்ப்படுவதில் மலிபனின் அர்ப்பணிப்பை இந்த முக்கியத்துவம் வாய்ந்த சாதனை மைல்கல் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.
50 க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கி வருகின்ற, சர்வதேச அங்கீகாரம் பெற்ற மற்றும் சான்று அங்கீகாரத்தைக் கொண்டுள்ள ஒரு நிறுவனமான Control Union Inspections (Pvt) Ltd என்ற நிறுவனம் இச்சான்று அங்கீகார நடைமுறைக்கு அனுசரணை வழங்கியுள்ளது. சர்வதேச நிபுணத்துவ விவசாய நடைமுறைகள் (சிறந்த விவசாய நடைமுறைகள் (Good Agricultural Practices - GAPs) அனைத்தையும் ஸ்தாபிப்பதற்கு, Peterson Projects and Solutions (Pvt) Ltd நிறுவனம் தனது நிபுணத்துவ உதவிகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விவசாய அடிப்படையிலான உற்பத்திகளுக்கான தரம் மற்றும் பாதுகாப்பு ஒப்பீட்டு நியமத்திற்காக, உலகின் முன்னணி சில்லறை விற்பனையாளர்கள் GLOBAL G.A.P சான்று அங்கீகாரத்தை மிகவும் நாடி வருகின்றனர். நிலைபேற்றியல் கொண்ட மற்றும் திறன்மிக்க உற்பத்திக் கட்டமைப்புக்களை உள்வாங்குவதில் முன்னோடியாக மலிபனை இந்த சாதனை நிலைநிறுத்தியுள்ளதுடன், அதன் உற்பத்திகளுக்கான சந்தை அணுகல் மட்டத்தை மேலும் மேம்படுத்தி, செலவைக் குறைக்கும் வகையிலான தொழிற்பாடுகளை உறுதி செய்கின்றது.
“மதிப்புமிக்க GLOBAL G.A.P சான்று அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளமை எமது உற்பத்தி நடைமுறையின் ஒவ்வொரு அம்சத்திலும் தரம் மற்றும் நிலைபேற்றியல் மீதான எமது இடைவிடாத அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கின்றது,” என்று மலிபன் குழுமத்தின் தலைவி திருமதி ஏ.ஜி. குமுதிகா பெர்னாண்டோ அவர்கள் குறிப்பிட்டார். “இந்த சாதனை மைல்கல் எமது வர்த்தகநாமத்தின் உலகளாவிய நன்மதிப்பை வலுப்படுத்துவது மாத்திரமன்றி, நாம் வழங்கும் உற்பத்திகள் மீது எமது நுகர்வோர் தொடர்ந்தும் நம்பிக்கையுடன் இருப்பதையும் உறுதி செய்கின்றது,” என்று அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டார்.
இந்த சான்று அங்கீகாரத்துடன், இலங்கையில் மிகவும் நம்பிக்கைக்குரிய வர்த்தகநாமங்களில் ஒன்றாக மகத்துவத்தின் மீதான பாரம்பரியத்தை மலிபன் தொடர்ந்தும் கட்டிக்காப்பதுடன், 35 க்கும் மேற்பட்ட நாடுகளில் நுகர்வோர் மத்தியில் பரிமாண மாற்றம் கண்டு வருகின்ற தேவைகளை நிறைவேற்றுவதற்கு புத்தாக்கம் மற்றும் தரம் ஆகியவற்றின் மீதான அர்ப்பணிப்பில் மலிபன் தொடர்ந்தும் உறுதியாக உள்ளது.

