Feb 10, 2025 - 11:41 AM -
0
குறைந்த செலவில் விமான சேவைகளை வழங்குவதில் இலங்கையில் முன்னிலை வகித்து வருகின்ற FitsAir நிறுவனம், கொழும்பு-டாக்கா இடையிலான தனது சேவைகளை விஸ்தரிக்கும் முகமாக, மேலும் இரு புதிய வாராந்த சேவைகளை ஆரம்பித்துள்ளமை குறித்து மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. இதற்கு முன்னர் வாராந்தம் மூன்று சேவைகள் இடம்பெற்று வந்துள்ள நிலையில், தற்போது மேம்படுத்தப்பட்ட சேவைகளுடன் வாராந்தம் ஐந்து விமான சேவைகள் இடம்பெறுவதுடன், பிரயாணிகளுக்கு சிறந்த நெகிழ்திறன் மற்றும் சௌகரியத்தை வழங்குகின்றது.
2025 பெப்ரவரி 15 முதல் மார்ச் 29 வரை இந்த மேலதிக சேவைகள் இடம்பெறவுள்ளதுடன், செவ்வாய், புதன், வியாழன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் புறப்படும் வகையில் இச்சேவை அட்டவணை திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கைக்கும், பங்களாதேஷிற்கும் இடையில் வணிக மற்றும் பொழுதுபோக்கு தேவைகளுக்காக பிரயாணம் செய்கின்றவர்கள் குறைந்த செலவில் தங்குதடையின்றி பயணிப்பதை, அதிகரிக்கப்பட்ட விமான சேவைகளின் எண்ணிக்கை உறுதி செய்கின்றது.
“தனியாருக்குச் சொந்தமான இலங்கையின் முதலாவது சர்வதேச விமான சேவை என்ற ரீதியில், குறைந்த செலவு கொண்ட, நம்பகமான மற்றும் குறித்த நேரம் தவறாத பிரயாண அனுபவங்களை வழங்குவதே எமது குறிக்கோள்,” என்று FitsAir நிறைவேற்றுப் பணிப்பாளர் அமர் காசிம் அவர்கள் குறிப்பிட்டார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “டாக்காவுக்கான எமது சேவைகளின் விஸ்தரிப்பு, பிராந்திய இணைப்பை வலுப்படுத்துவதில் முக்கியமானதொரு படியாக மாறியுள்ளதுடன், சேவைகளை அதிகரித்துள்ளதன் மூலமாக பிரயாணிகளுக்கு தற்போது கூடுதலான பிரயாண தெரிவுகள், நெகிழ்திறன், மற்றும் கட்டுபடியான செலவில் அவற்றை மேற்கொள்வதற்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது. எதிர்வரும் கோடைகாலப் பருவத்தின் போது வாரம் ஒன்றுக்கு ஆறு சேவைகளை மேற்கொள்ளும் வகையில் எமது சேவைகளை அதிகரிப்பதற்கும் நாம் ஏற்கனவே திட்டமிட்டுள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.
முக்கிய பிராந்திய நகரங்களுக்கு தனது சேவைகளை FitsAir விஸ்தரித்து வருகின்றது. டாக்காவுக்குப் புறம்பாக, டுபாய் மற்றும் மாலே ஆகிய நகரங்களுக்கு தினசரி விமான சேவைகளையும், சென்னைக்கு வாராந்தம் மூன்று விமான சேவைகளையும் இவ்விமானசேவை மேற்கொண்டு வருகிறது. மேலும், பிரயாணிகளின் பாவனைக்கு உதவும் வகையில், பிரபலமான பிரயாண வழித்தடங்களின் வலையமைப்புக்கள் நிறுவப்பட்டிருக்கின்றன.
FitsAir இணையத்தளம் (www.fitsair.com), அங்கீகரிக்கப்பட்ட பிரயாண முகவர்கள், மற்றும் டிக்கெட் முன்பதிவு அலுவலங்கள் மூலமாக பிரயாணிகள் தமது டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்துகொள்ள முடியும். மேம்பட்ட இணைப்புத்திறன் மற்றும் ஒப்பற்ற பிரயாண அனுபவத்துடன், இன்னும் அதிகமான எண்ணிக்கையான பிரயாணிகளை வரவேற்பதற்கு FitsAir ஆவலாக உள்ளது.

