வடக்கு
சீனாவின் சகோதரப்பாசம் தொடர வேண்டும்

Feb 10, 2025 - 03:53 PM -

0

சீனாவின் சகோதரப்பாசம் தொடர வேண்டும்

'மாகாணசபை முறைமையென்பது தாம் வென்றெடுத்த உரிமையென தமிழர்கள் கருதுவதால் அந்த உரிமையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கை வைக்காது. இவ்வருட இறுதியில் அல்லது அடுத்த வருடம் முற்பகுதியில் மாகாணசபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் என யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும், கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

 

சீனா மற்றும் இலங்கை நாட்டின் நட்புறவின் பயனாக 'சீனாவின் சகோதர பாசம்' எனும் வாசகத்துடன் யாழ். மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சீனா நாட்டின் உதவியில் உலருணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று (10) யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட செயலாளர் பிரதீபன் தலைமையில் நடைபெற்றது.

 

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கலந்துக் கொண்டதோடு, சிறப்பு அதிதியாக இலங்கைக்கான சீனத்தூதரகத்தின் பிரதி பொறுப்பதிகாரி ஜு யான்வேய் (Zhu Yanwei), அதிதியாக வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் ஆகியோர் கலந்துகொண்டு யாழ்.  மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 1,070 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர்.

 

இந்நிகழ்வில் மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர்கள், மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் அதிகாரிகள், ஏனைய உத்தியோகத்தர்கள், சீனத்தூதரகத்தின் ஏனைய அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

 

இந்நிகழ்வின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அமைச்சர் தெரிவிக்கையில்,

 

மக்களுக்கான எமது நேர்வழி அரசியல் பயணத்தின்போது எதற்கும் அஞ்சி, அடிபணியப்போவதில்லை. போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும். ஏனெனில் மக்கள் சக்தி எமது பக்கம்.

 

சீனாவின் சகோதரப்பாசம் தொடர வேண்டும். தேசிய மக்கள் சக்தி ஆட்சி பீடம் வந்து 80 நாட்களுக்கு மேல் ஆகின்றது. இக்காலப்பகுதிக்குள் நாட்டைக்கட்டியெழுப்பும் பயணத்துக்கான அடித்தளம் இடப்பட்டு வருகின்றது. இதற்குரிய ஆணையை வழங்கிய மக்களுக்கு எமது நன்றிகள்.

 

யாழ். மக்களும் தேசிய மக்கள் சக்தியை முதன்மைக் கட்சியாக தெரிவுசெய்துள்ளனர். அதற்காக மீண்டும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். வறுமை ஒழித்தல், டிஜிட்டல் மயமாக்கல் உட்பட ஒட்டுமொத்த நாட்டையும் மேம்படுத்தவதற்கான திட்டமே தூய்மை ஸ்ரீலங்கா திட்டமாகும்.

 

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தின் கீழ்வரும் மாகாணசபை முறைமை நீண்டுநிலைக்கக்கூடிய நிரந்தர தீர்வு என நாம் நம்பவில்லை. எனினும், மாகாணசபை முறைமையை தமக்கு கிடைத்த உரிமையாக தமிழ் மக்கள் நம்புகின்றனர்.

 

எனவே தான் மாகாணசபை முறைமை மீது கைவைக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

மாகாணசபை முறைமையை அர்த்தமுள்ள முறைமையாக மாற்றியமைப்போம். இவ்வருடத்துக்குள் அல்லது அடுத்த வருடம் முற்பகுதியில் அதற்கான தேர்தல் நடத்தப்படும்.

 

சிறுபான்மையின மக்கள் உட்பட நாட்டு மக்களின் உரிமைகளை நிலைநாட்டுகின்ற புதிய அரசமைப்பு கொண்டுவரப்படும்.

 

அதேவேளை, மக்களுடன் கலந்துரையாடி, நாட்டில் மீண்டும் இனவாதம், மதவாதம் ஏற்படாதவகையில் தையிட்டி விகாரைப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05