Feb 11, 2025 - 11:24 AM -
0
50 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய கேரளா கஞ்சாவை சூட்சுமமாக கட்டிலின் கீழ் பதுக்கி வைத்திருந்த சந்தேக நபர் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரபல பாடசாலைக்கு அருகில் உள்ள வீடொன்றில் கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் தேடுதல் நடவடிக்கை நேற்று (10) மாலை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது கடந்த புதன்கிழமை (5) இரு சந்தேக நபர்கள் பெருந்தொகையான கேரளா கஞ்சா மற்றும் ஒரு தொகை பணத்துடன் கல்முனை விசேட அதிரடிப்படையினர் இரு வேறு சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டிருந்தனர். 5 நாட்களாக தடுப்புகாவலில் வைக்கப்பட்ட மேற்படி இரு சந்தேக நபர்களிடம் விசேட அதிரடிப்படையினரின் புலனாய்வு பிரிவினர் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் பிரகாரம் இத்தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.
தேடுதலில் 33 வயதுடைய ஒராபி பாஸா வீதியை சேர்ந்த சந்தேகநபரான வீட்டு உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 18.169 கிலோகிராம் கேரள கஞ்சாவும் வீட்டில் உள்ள கட்டிலின் கீழ் பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
மேலும், கைதான சந்தேகநபர் உட்பட 50 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மற்றும் சான்றுப் பொருட்கள் யாவும் சட்ட நடவடிக்கைக்காக சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
--