Feb 11, 2025 - 11:50 AM -
0
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐசிசி) சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பமாகிறது. இந்த தொடர் பாகிஸ்தான் மற்றும் டுபாயில் நடைபெறுகிறது. இதில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் டுபாயில் நடைபெறுகிறது.
இந்த தொடருக்கான இந்திய அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இடம்பெற்றுள்ளார். முன்னதாக அவுஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின் கடைசி டெஸ்ட் போட்டியின் போது பும்ரா காயமடைந்தார். முதுகு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அவர் கடைசி டெஸ்ட் போட்டியின் இன்னிங்ஸில் பந்து வீசவில்லை. அதன் பின்னர் அவர் எந்தவித போட்டிகளிலும் பங்கேற்கவில்லை.
பெங்களூருவில் உள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சயைின் (பி.சி.சி.ஐ.) விசேட நிலையத்தில் பும்ராவுக்கு சமீபத்தில் ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவு தொடர்பாக பி.சி.சி.ஐ.யின் மருத்துவக் குழுவினர், தேர்வுக்குழு மற்றும் இந்திய அணி நிர்வாகத்துடன் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. ஆனால் இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் சம்பியன்ஸ் கிண்ண போட் டிக்கான வீரர்களின் இறுதி பட்டியலை அறிவிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிகிறது. இதனால் ஜஸ்பிரித் பும்ரா பங்கேற்பது குறித்த முடிவை இந்திய தேர்வுக் குழுவினர் இன்று அறிவிக்கலாம் என்று தெரிகிறது.
ஒருவேளை ஜஸ்பிரித் பும்ரா உடல் தகுதி இல்லாமல் இடம்பெறாமல் போனால் அவர் இடத்தில் தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதே நேரத்தில் வேகப்பந்து வீரர் ஹர்ஷித் ராணாவும், பும்ராவுக்கான இடத்தில் இடம் பெற வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

