Feb 11, 2025 - 06:01 PM -
0
ஒவ்வொரு ஆண்டும் வறட்சியான காலப்பகுதியில் வனப்பகுதியை அண்மித்த புல்வெளிகள், வன பயிர்நிலங்கள் மற்றும் பிற வனப்பகுதிகளில் தீ விபத்து ஏற்படும் போக்கு இருப்பதாக வனப் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டில் 437.9 ஹெக்டேர் நிலம் இவ்வாறு தீக்கிரையானதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த வனப் பாதுகாப்புத் திணைக்களம், இடர் முகாமைத்துவ மத்திய நிலையம், மாவட்டச் செயலாளர்கள், முப்படைகள், பொலிஸ், சிவில் பாதுகாப்புப் படை மற்றும் பிற நிறுவனங்கள் இணைந்து செயல்பட்டு வருவதாக வனப் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தேவைப்படும்போது தீயை அணைக்க இலங்கை விமானப்படையின் உதவியை நாடுவதாகவும், வறட்சியான வானிலை காரணமாக குறைந்த எண்ணிக்கையிலான தீ விபத்துகள் ஏற்பட்டதாகவும், அந்த தீ விபத்துகளும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பதுளை, கண்டி, நுவரெலியா, மாத்தளை, இரத்தினபுரி, மொனராகலை மற்றும் கேகாலை போன்ற மாவட்டங்களில் அடிக்கடி தீ விபத்துக்கள் ஏற்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கடந்த ஆண்டு இதுவரை கண்டி மாவட்டத்தில் 04 தீ விபத்துகளும், மாத்தளை மாவட்டத்தில் ஒரு தீ விபத்தும், நுவரெலியா மாவட்டத்தில் ஒரு தீ விபத்தும், இரத்தினபுரி மாவட்டத்தில் இரண்டு தீ விபத்துகளும், பதுளை மாவட்டத்தில் ஒரு தீ விபத்தும் பதிவாகியுள்ளன.
கண்டி மாவட்டத்தின் கலஹா பகுதியில் உள்ள சுமார் 20 ஏக்கர் பைனஸ் தோட்டம் நேற்று (10) இரவு தீப்பிடித்ததாகவும், இன்று காலைக்குள் அது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் திணைக்களம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வட்டவளை மற்றும் பதுளை பகுதிகளில் ஏற்பட்ட தீ விபத்துகளும் அணைக்கப்பட்டதாகத் தெரிவித்த திணைக்களம், தீயை விரைவாக அணைக்க சம்பந்தப்பட்ட பிரிவுடன் இணைந்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
அதன்படி, நாடு முழுவதும் காட்டுத் தீ விபத்துகள் எதுவும் ஏற்படவில்லை என்றும், இதுபோன்ற தீ விபத்துகள் ஏற்பட்டதாக வரும் தகவல்கள் தவறானவை என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், குறித்த தீ விபத்துகள் அனைத்தும் மனித நடவடிக்கைகளால் ஏற்பட்டவை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.