Feb 11, 2025 - 06:52 PM -
0
நாளை (12) போயா தினம் என்பதால், மின்வெட்டுக்கு செல்லாமல் நாடு முழுவதும் மின்சாரத்தை வழங்க முடியும் என்று இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்தார்.
சாதாரண வேலை நாளை விட போயா நாளில் மின்சார தேவை குறைவாக இருப்பதால் மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய அவசியமில்லை என்று அவர் தெரிவித்தார்.
இன்று (11) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
சாதாரண வேலை நாளில், மின்சாரத் தேவை சுமார் 2,600 மெகாவோட் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் செயலிழந்ததால், தற்போது அனல் மின் நிலையங்கள் மற்றும் பிற மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து 2,300 மெகாவோட் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.
அதன்படி, தினமும் சுமார் 200 அல்லது 250 மெகாவோட் மின்சாரத்தை வழங்க முடியாதுள்ளதால் இவ்வாறு மின்வெட்டுக்குச் செல்ல வேண்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், போயா போன்ற விடுமுறை நாட்களில் மின்சார தேவை சுமார் 2,100 மெகாவோட் என்பதால், நாள் முழுவதும் தொடர்ந்து மின்சாரத்தை பெற்றுக் கொடுக்கக்கூடிய இயலுமை உள்ளது.
மேலும், நுரைச்சோலை நிலக்கரி மின் நிலையத்தை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், வெள்ளிக்கிழமைக்குள் (14) அது நிச்சயமாக தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும் கருத்துக்களைத் தெரிவித்த அவர், வெள்ளிக்கிழமைக்கு முன்னர் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் பணிகளை முடித்து, தேவையான 300 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்பில் சேர்க்க அனைத்து ஊழியர்களும் இரவும் பகலும் உழைத்து வருவதாகக் கூறினார்.