வடக்கு
வடக்கின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த எதிர்பார்ப்பு

Feb 12, 2025 - 12:14 PM -

0

வடக்கின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த எதிர்பார்ப்பு

வடக்கு மாகாணத்தின் தேவைப்பாடுகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனும், இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் இஷோமார்ரா அகியோர் இடையே கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. 

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று (11) இந்தச் சந்திப்பு நடைபெற்றது. 

தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் அபிவிருத்திப் பணிகளை வடக்கில் முன்னெடுப்பதற்கான சாதகமாக சமிஞ்சை காணப்படுவதாகச் சுட்டிக்காட்டிய ஆளுநர், கடந்த காலத்தில் ஜப்பானிய அரசாங்கம் ஜெய்க்கா திட்டத்தின் ஊடாக மேற்கொண்ட உதவிகளுக்கும் நன்றிகளைத் தெரிவித்தார். 

வடக்கின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்ட ஆளுநர் போக்குவரத்து வசதிகள், வீதிகள் அதற்குப் பிரதான சவாலாக இருப்பதாகவும் தூதுவருக்குத் தெரியப்படுத்தினார். 

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான பயண நேரம் அதிகமாக இருப்பதாக குறிப்பிட்ட ஆளுநர் இது சுற்றுலாத்துறையை வடக்கில் மேம்படுத்துவதில் சில தடங்கல்களை ஏற்படுத்துகின்றது எனவும் குறிப்பிட்டார். வடக்கு மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாயையும், கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டையையும் இணைக்கும் பாலம் அமைக்கப்பட்டால் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு அது பெரிதும் உதவியாக அமையும் எனவும் ஆளுநர் இதன்போது சுட்டிக்காட்டினார். 

போருக்கு முன்னர் இயங்கிய பல தொழிற்சாலைகள் மீளவும் இயக்கப்படாமையால் வேலை வாய்ப்பு வடக்கில் சவாலாக இருக்கின்றது என்பதை ஆளுநர் சுட்டிக்காட்டினார். விவசாய மற்றும் மீன்பிடியில் வடக்கில் உள்ள தேவைப்பாடுகள் தொடர்பிலும் தூதுவருக்கு ஆளுநர் தெரியப்படுத்தினார். 

புதிய அரசாங்கத்தின் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பாகவும் தூதுவர் ஆளுநரிடம் கேட்டறிந்து கொண்டார். அத்துடன் வடக்கு மாகாணத்துக்கு கிடைக்கப்பெறும் ஏனைய நாடுகளின், நிறுவனங்களின் உதவிகள் தொடர்பிலும் ஆளுநரிடம், தூதுவர் கேள்விகளை எழுப்பினார். 

ஜப்பான் தொடர்ந்தும் வடக்கு மக்களுக்கு உதவிகளை வழங்கவேண்டும் என எதிர்பார்ப்பதாக ஆளுநர் இந்தச் சந்திப்பில் சுட்டிக்காட்டியிருந்தார். 

ஜப்பானியத் தூதுவருடனான சந்திப்பில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன், ஆளுநரின் இணைப்புச் செயலாளர் எந்திரி அ.எ.சு.ராஜேந்திரா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05