Feb 12, 2025 - 04:13 PM -
0
தேங்காய் பறிக்க தென்னை மரத்தில் ஏறிய இளைஞன் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பிரதேசத்தில் இன்று (12) இடம்பெற்றுள்ளது.
நிந்தவூர் - 8 அல்மினன் வீதியைச் சேர்ந்த 25 வயதுடைய முஹமட் அன்சார் முகமட் ஆசாத் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மரணமடைந்த இளைஞன் கடற்தொழில் மேற்கொள்பவர் என்பதுடன் 11 பேர் கொண்ட குடும்பத்தில் முதலாவது பிள்ளையாவார்.
இன்று விடுமுறை தினம் என்பதால் தேங்காய் பறிப்பதற்கு சென்ற நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அத்துடன் உயரமான தென்னை மரத்தில் ஏறி தேங்காய்களை பறிக்கும் போது தென்னை மரத்தின் காய்ந்த ஓலையொன்றைப் பிடித்தபோது கால் சறுக்கியதில் கீழே இருந்த சுவர்மீது விழுந்து மரணித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் நிந்தவூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் சடலம் நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டிருந்தது.
மேலும், சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் ஜவாஹீர் மேற்கொண்டுள்ளதுடன் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
--