Feb 13, 2025 - 05:23 PM -
0
சீகிரியாவிற்கு வருகைதந்த தாய்லாந்து பெண் ஒருவர், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 70 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுள்ள குஷ் போதைப்பொருட்களை இன்று (13) மதியம் சீகிரியா பொலிஸாரிடம் ஒப்படைத்தார்.
இந்தப் பெண் உட்பட 17 பேர் கொண்ட தாய்லாந்து சுற்றுலாப் பயணிகள் குழு 12 நாள் சுற்றுப்பயணமாக நேற்று (12) நாட்டிற்கு வந்திருந்தனர்.
விமான நிலையத்திலிருந்து பஸ்ஸில் சீகிரியாவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வந்து அவர்களின் பொருட்களைச் சோதனையிட்ட போது, தாய்லாந்து பெண்களில் ஒருவரின் பயணப் பை மாற்றப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
குறித்த பெண் பயணப் பையை திறந்தபோது, உள்ளே குஷ் போதைப்பொருள் இருப்பதை அவதானித்துள்ளார்.
அதன்படி, அவர் தான் வந்த சுற்றுலா நிறுவன வழிகாட்டியுடன் சீகிரியா பொலிஸாருக்கு வந்து போதைப்பொருள் பையை ஒப்படைத்தார்.
குறித்த பையில் ஒவ்வொன்றும் 600 கிராம் நிறையுள்ள 23 பொதிகளில் குஷ் போதைப்பொருள் காணப்பட்டுள்ளது.
வரலாற்றில் தம்புள்ளை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட குஷ் போதைப்பொருட்களின் மிகப்பெரிய அளவு இதுவென பொலிஸார் குறிப்பிட்டனர்.
குறித்த சுற்றுலாப் பயணிகள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் நாட்டிற்கு வந்தனர்.
இருப்பினும், இந்தளவு போதைப்பொருள் எவ்வாறு சோதனைக்கு உட்படுத்தப்படாமல் விமான நிலையத்தை விட்டு வெளியே கொண்டுவர முடிந்தது என்பது ஒரு பாரிய கேள்வியாகும் என பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி, சம்பவம் குறித்து தம்புள்ளை நீதவான் நீதிமன்றத்தில் முறைப்பாடு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் சீகிரியா பொலிஸார் குறிப்பிட்டனர்.