Feb 13, 2025 - 06:55 PM -
0
ஒருநாள் போட்டியில் விதிகளை மீறியதற்காக 3 பாகிஸ்தான் வீரர்களுக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.
பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடர் பெப்ரவரி 8ஆம் திகதி தொடங்கியது.
நேற்று (12) இடம்பெற்ற ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 352/5 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. அதிகபட்சமாக கிளாசன் 87, பவுமா 82, ப்ரிட்ஸ்கி 83 ஓட்டங்களைப் பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 49 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா துடுப்பெடுத்தாடும் போது 28ஆவது ஓவரில் ஷாகின் ஷா அப்ரிடி வேண்டுமென்றே மேத்திவ் பிரிட்ஜ்கி ஓடும்போது இடைமறித்தார். பின்னர், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனால் அவருக்கு 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
அடுத்ததாக 29ஆவது ஓவரில் டெம்பா பவுமா விக்கெட்டினை அவருக்கு அருகில் நெருக்கமாகச் சென்று கொண்டாடியதற்காக ஷகில், குலாம் ஆகிய இருவருக்கும் தலா போட்டி ஊதியத்திலிருந்து 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
சமீபத்தில் பிஜிடி தொடரில் சாம் கான்ஸ்டாஸை மோதிய விராட் கோலிக்கு 20 சதவீதம் அபராதம் விதித்ததும் குறிப்பிடத்தக்கது.
நாளை (14) பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.