செய்திகள்
அர்ச்சுனா தாக்குதல் சம்பவத்தில் புதிய திருப்பம்

Feb 15, 2025 - 10:10 AM -

0

அர்ச்சுனா தாக்குதல் சம்பவத்தில் புதிய திருப்பம்

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நபர் ஒருவரை தாக்கிய பிரச்சனை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வைத்து இரு தரப்பினரதும் சம்மதத்துடன் சமரசமாக முடித்து வைக்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு (12) பாராளுமன்ற உறுப்பினரும் , சட்டத்தரணி கௌசல்யாவும் உணவருத்திக்கொண்டிருந்த வேளை அவ்விடத்திற்கு வந்த இருவர், அவர்களுடன் கதைக்க முற்பட்ட நிலையில், தர்க்கமாக மாறி கைக்கலப்பில் முடிந்தது. 

கைக்கலப்பில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நபர் ஒருவரின் தலையில் பீங்கானால் அடித்தமையால், அவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தனது உயிருக்கு ஆபத்து என யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். 

அதேவேளை, காயமடைந்த நபரும் தன் மீதான தாக்குதலுக்கும் பரஸ்பர முறைப்பாட்டை வழங்கி இருந்தார். 

இந்நிலையில் நேற்றைய தினம் (14) இரவு இரு தரப்பினரையும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து, யாழ்ப்பாண உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. 

இதன்போது, இரு தரப்பினரும் சமாதானமாக செல்வதாகவும், முறைப்பாடுகளை மீள பெற்றுக்கொள்வதாகவும் கூறி சமரசமாக செல்வதற்கு உடன்பட்டதை அடுத்து, இரு தரப்பினருக்கும் இடையிலான பிரச்சினை பொலிஸ் நிலையத்தில் வைத்து தீர்த்து வைக்கப்பட்டது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05