Feb 16, 2025 - 05:53 PM -
0
கொழும்பு, பழைய யோன் வீதியில் இன்று (16) நடத்தப்பட்ட சோதனையில், மறைத்து வைக்கப்பட்டிருந்த கீரி சம்பா 5 கிலோகிராம் நிறையுடைய சுமார் 550 பொதிகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை கண்டுபிடித்துள்ளது.
மேல் மாகாண பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் வழங்கிய தகவலின்படி, வாடிக்கையாளர் ஒருவர் ஊடாக அரிசியை கொள்வனவு செய்ய கேட்ட போது, குறித்த வர்த்தகர் அரிசி இல்லையென குறிப்பிட்டுள்ளார்.
பின்னர், நுகர்வோர் விவகார அதிகாரசபையின் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் விசாரணை அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது, பொதியிடப்பட்ட ஒரு தொகை கீரி சம்பா கண்டுபிடிக்கப்பட்டது.
சுமார் 2,750 கிலோகிராம் கொண்ட இந்த கீரி சம்பாவின் சந்தை பெறுமதி 7 இலட்சத்து 15,000 ரூபா என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்த கீரி சம்பா தொகை சர்க்கரை பைகள் மற்றும் உப்பு பைகளில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்து அரிசியை மறைத்து வைக்கும் வியாபாரிகளைத் தேடி நுகர்வோர் விவகார அதிகாரசபையால் சில நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்ட நாளாந்த சோதனைகளின் போது, இந்தக் கடை மீதும் வழக்குத் தொடரப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதேவேளை, நேற்று (15) நடத்தப்பட்ட சோதனையில், கொழும்பு 12 இல் உள்ள ஒரு களஞ்சியசாலையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கிலோ நிறையுடைய கீரி சம்பா சுமார் 950 பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டதோடு, இதன் சந்தை பெறுமதி சுமார் 12 இலட்சத்து 35,000 ரூபாவாகும்.
மேலும், கடந்த 10 ஆம் திகதி, கொழும்பில் உள்ள பழைய யோன் வீதியில் 4 மில்லியன் ரூபாவுக்கு மேல் சந்தை பெறுமதியுள்ள சுமார் 3,000இற்கும் மேற்பட்ட அரிசி மூடைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

