Feb 18, 2025 - 10:17 AM -
0
இந்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பாக முன்வைக்கப்பட்ட முன்மொழிவு குறித்து பல தொழிற்சங்கங்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன.
இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், ஆசிரியர் அதிபர்களின் சம்பள உயர்வு தொடர்பான 'சுபோதனி குழு அறிக்கை' குறித்து அவதானம் செலுத்தப்படவில்லை என்று தெரிவித்தார்.
மூன்று ஆண்டுகளுக்கு சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. நாங்கள் கேட்கிறோம், 2026இற்கான வரவு செலவுத் திட்டம் இல்லையா? 2027இற்கான வரவு செலவுத் திட்டம் இல்லையா? 3 வருடங்களுக்கு சம்பள உயர்வு என்றால் என்ன? நாங்கள் அனைவரும் 20,000 ரூபா சம்பள உயர்வை எதிர்பார்த்தோம். முக்கிய விடயம் என்னவென்றால், எங்கள் ஊதியப் போராட்டம் சுபோதனி குழு அறிக்கையின் மீதமுள்ள மூன்றில் இரண்டு பங்கைப் பெறுவதற்காக இருந்தது. இதைப் பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை. இதைப் பற்றிப் பேசாமல் இருப்பது ஒரு கடுமையான பிரச்சனை."
இதேவேளை, அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அரசாங்கம் மறுபரிசீலனை செய்யும் என்று சுகாதார தொழிற்சங்க கூட்டணியின் அழைப்பாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்தார்.
இதற்கிடையில், அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பள அதிகரிப்பு போதுமானதாக இல்லை என்று தபால் தொழிற்சங்க முன்னணியின் அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.
இருப்பினும், சில தரப்பினர் இந்த ஆண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை ஆய்வு செய்யாமல் கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டாம் என்று தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் பிரதிச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியராச்சி கோரிக்கை விடுத்துள்ளார்.