Feb 18, 2025 - 04:12 PM -
0
மக்கள் கோரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடாத்த வேண்டாமென எதிர்கட்சி உறுப்பினர்கள் கூறுவது நகைப்புக்குறிய விடயமென பெருந்தோட்டம் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் மீதான உரையைத் தொடர்ந்து, பாராளுமன்றத்தில் உறையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
"கடந்த அரசாங்கத்தின் போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடத்த வேண்டிய உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தாது தேர்தலை நடாத்த பணமில்லை என கூறி காலத்தை கடத்தி இந்த நாட்டு மக்களுக்கும் ஜனநாயகத்திற்கும் துரோகத்தை ஏற்படுத்தினார்.
ஒரு மனிதனின் பிறப்பு முதல் இறப்புவரை இந்த உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக பாரிய சேவையினை பெற்றுக்கொள்ள முடிகிறது. அந்த சேவைகள் அனைத்தும் இன்று தடைப்பட்டுள்ளதாக நாம் அறிந்துள்ளோம். நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியில் சட்டத்திட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அங்கு மக்களுக்கான சேவைகள் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக முறையாக பெற்றுக்கொடுக்க முடியவில்லை.
மலையக பெருந்தோட்ட பகுதியில் உள்ள பெண்களுக்கு ஒரு வாய்பினை ஏற்படுத்தி கொடுக்க இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காணப்படுகிறது. அது போன்ற ஒரு வாய்பினை கடந்த அரசாங்கம் குழி தோண்டி புதைத்துள்ளது. இதையெல்லாம் செய்தவர்கள் இன்று பாராளுமன்றத்தில் எதிர்கட்சி பக்கம் இருந்துக்கொண்டு பல்வேறு குளறுபடிகளை செய்துகொண்டு இருக்கிறார்கள். இவர்களின் முகத்தை உற்றுநோக்குபோது ஒரு கலக்கமும் தயக்கமும் தெரிகிறது.
உள்ளூராட்சி மன்ற தேர்தலை அப்போது நடாத்தியிருந்தால் மக்கள் இவர்களுக்கு தக்க பாடத்தினை கற்பித்திருப்பார்கள். ஆகையால் தான் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தல் நடாத்தவில்லை. மலையக பெருந்தோட்ட மக்களுக்கு தோட்ட நிறுவனங்கள் பல்வேறு சேவைகளை இடைநிறுத்தியிருக்கிறது.
எனவே, மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் இடமாக இந்த உள்ளூராட்சி மன்றங்கள் அமைந்துள்ளன. வீதிபுனரமைப்பு, குடிநீர் பிரச்சினை போன்ற பிரச்சினைகளுக்கு உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டது.
இன்று ஒருசிலர் பரீட்சைகளையும் வரவு செலவு திட்டத்தையும் காரணம் காட்டி நாம் மக்களிடம் சென்று எவ்வாறு வாக்குறுதிகள் வழங்குவது என பயந்து கொண்டு தேர்தலை பிற்போட முயற்சி செய்கிறார்கள். நாட்டு மக்கள் இன்று ஜனநாயகத்தின் மீதும் தேர்தல் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என ஜனநாயகத்தை பாதுகாக்கும் அரசாங்கம்தான் எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம். ஆகையால் எமது அரசாங்கம் அறிவித்ததை போல் நிச்சியமாக உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடாத்தி காட்டுவோம்" என்றார்.
--