Feb 18, 2025 - 12:08 PM -
0
இலங்கை அரசாங்கத்தின் 2025 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் எந்த அளவிற்கு சர்வதேச நாணய நிதியத்தின் அளவுருக்களுடன் இணங்குகின்றன என்பதை தீர்மானிக்க சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை எதிர்வரும் 28 ஆம் திகதி கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் எதிர்வரும் கூட்டங்கள் தொடர்பான அறிவிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீடிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் கீழான மூன்றாவது மீளாய்வின் பின்னர் சர்வதேச நாணய நிதியம் இலங்கையுடன் கடந்த நவம்பர் மாதம் 23 ஆம் திகதி பணியாளர்கள் மட்ட இணக்கப்பாட்டை எட்டியது.
இதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை மூன்றாவது மீளாய்வைப் பரிசீலித்து அங்கீகரிக்குமாயின் இலங்கைக்கு நீடிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் நான்காவது தவணையாக மேலும் 333 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி கிடைக்கப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.