Feb 18, 2025 - 12:22 PM -
0
டுபாயில் தலைமறைவாக இருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர் ஹபரகட கசுனின் உதவியாளரை நவகமுவ பொலிஸ் நிலைய ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் அம்பலாந்தோட்டை பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், சில மாதங்களுக்கு முன்பு நவகமுவ பகுதியில் குடியேறியுள்ளார்.
அவர் அங்கு ஒரு பெண்ணுடன் வசித்து வந்ததாகவும், இந்த போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையை அவருடன் இணைந்து முன்னெடுத்து வந்துள்ளதாகவும் விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.
சந்தேக நபரின் கணக்கிற்கு பணம் வந்த பிறகு, அவர் பல்வேறு இடங்களுக்குச் சென்று ஐஸ் போதைப்பொருட்களை விநியோகித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
மேல் மாகாண புலனாய்வுப் பிரிவின் நவகமுவ உப பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நவகமுவ பொலிஸ் நிலைய ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி மேஜர் தாரக ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபரிடம் இருந்து 202 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் 1 கிராம் ஐஸ் போதைப்பொருளை சுமார் 15,000 ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் நாளை (19) கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார், மேலும் அங்கு தடுப்புக்காவல் உத்தரவு பெற திட்டமிடப்பட்டுள்ளது.